பிரான்ஸ் அதிகாரிகள் சிறுவர்களைப் போன்ற தோற்றம் கொண்ட செக்ஸ் பொம்மைகள் விற்பனைக்கு எதிராக விசாரணை ஆரம்பித்ததைத் தொடர்ந்து, உலகப்பிரசித்தி பெற்ற ஆன்லைன் வணிக நிறுவனம் Shein தனது தளங்களில் இவ்வகை பொருட்களை முழுமையாகத் தடை செய்துள்ளது.
திங்களன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், நிறுவனம் “செக்ஸ் டால் வகை பொருட்கள் மீது முழு தடை” விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனுடன் தொடர்புடைய அனைத்து விளம்பரங்களும் படங்களும் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது. நிறுவனம் இந்தத் தடை உலகளாவிய அளவில் அமலில் இருக்கும் எனவும் உறுதியளித்துள்ளது.
“Shein தளத்தில் இத்தகைய பொருட்கள் மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களால் பதிவேற்றப்பட்டிருந்தாலும், அதற்கான முழு பொறுப்பையும் நான் ஏற்கிறேன்,” என Shein நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டொனால்ட் டாங்க் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு, Shein தனது முதல் நேரடி கடையை பாரிசில் திறப்பதற்கான சில நாட்களுக்கு முன்பே வந்துள்ளது. இதற்கு முன்னர் பிரான்ஸ் நிதியமைச்சர், “சிறுவர்களைப் போன்ற செக்ஸ் பொம்மைகள்” விற்பனை தொடர்ந்தால், அந்த நிறுவனத்தை பிரான்சிலிருந்து தடை செய்வதாக எச்சரித்திருந்தார்.
பாரிஸ் வழக்கறிஞர் அலுவலகம், Shein மற்றும் பிற ஆன்லைன் விற்பனையாளர்கள் மீது விசாரணை தொடங்கியுள்ளதாகவும், பிரான்ஸ் மோசடி தடுப்பு பிரிவு கடந்த சனிக்கிழமை வழங்கிய அறிக்கையின் பேரில் இது முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
Le Parisien பத்திரிகை வெளியிட்ட புகைப்படத்தில், Shein தளத்தில் விற்பனைக்குக் கிடைத்த பொம்மை ஒன்றின் உயரம் சுமார் 80 செ.மீ. ஆக இருந்ததுடன், அது ஒரு டெடி பியரைத் தழுவியிருந்தது.
இந்த விவகாரம் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, Shein உடனடியாக அந்தப் பொம்மைகளை தளத்திலிருந்து நீக்கியது மற்றும் உள்நாட்டு விசாரணை ஒன்றையும் தொடங்கியது. அதன் பின்னர், அனைத்து செக்ஸ் பொம்மைகளும் தடைசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மேலும், தளத்தில் பதிவேற்றப்படும் உள்ளடக்கங்களின் நம்பகத்தன்மை மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காக ஒரு தனிப்பிரிவு அமைக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
Shein தனது முதல் நேரடி கடையை இந்த புதன்கிழமை பாரிசின் மையப்பகுதியில் உள்ள பிரபலமான BHV Marais வணிக மையத்தில் திறக்கவுள்ளது. இந்த முடிவு பிரான்சில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. BHV நிறுவன இயக்குநர் ஃபிரெடெரிக் மெர்லின், “இத்தகைய சிறுவர் தோற்றம் கொண்ட பொம்மைகள் விற்பனை ஏற்க முடியாதது” என கூறியதுடன், BHV மையத்தில் Shein தயாரித்த ஆடைகள் மற்றும் பொருட்களே விற்கப்படும் என விளக்கம் அளித்தார்.
சீனாவில் தொடங்கப்பட்டு தற்போது சிங்கப்பூரில் தலைமையகத்தைக் கொண்டுள்ள Shein, தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் நிலைமை மற்றும் வேகமான ஆடை உற்பத்தி முறையின் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து பலமுறை விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
2025ஆம் ஆண்டில் பிரான்ஸ் அரசு, Shein நிறுவனத்துக்கு மொத்தம் 191 மில்லியன் யூரோ (அமெரிக்க $220 மில்லியன்) அபராதம் விதித்துள்ளது. இவை இணையக் குக்கீ விதிமுறைகளை மீறல், தவறான விளம்பரம், வழு தகவல் மற்றும் பொருட்களில் உள்ள பிளாஸ்டிக் நுண்கூறுகள் குறித்து தகவல் அளிக்காதல் போன்ற காரணங்களுக்காக விதிக்கப்பட்டவை.
இதற்கிடையில், ஐரோப்பிய ஆணையமும் Shein நிறுவனத்தின் சட்டவிரோதப் பொருட்கள் குறித்த புகார்களை விசாரித்து வருவதுடன், வேகமான ஆடை உற்பத்தி முறைமைகளின் சுற்றுச்சூழல் தாக்கத்தை கட்டுப்படுத்தும் சட்டம் ஒன்றையும் ஐரோப்பிய நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

