அந்நாளுக்குள் இந்த முடிவை திரும்பப் பெறாவிட்டால், டிசம்பர் இரண்டாம் வாரத்தில் நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை நேரத்தை 30 நிமிடங்கள் நீட்டி பிற்பகல் 2 மணி வரை நடத்தும் அரசின் முடிவை எதிர்த்து, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு அரசுக்கு நவம்பர் 7ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளது.
அந்நாளுக்குள் இந்த முடிவை திரும்பப் பெறாவிட்டால், டிசம்பர் இரண்டாம் வாரத்தில் நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவரான பிரியந்த பெர்னாண்டோவும் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், 2026 ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீட்டிக்கும் அரசின் முடிவுக்கு எதிராக டிசம்பர் இரண்டாம் வாரத்தில் ஒரு நாள் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்றும், அதற்குப் பின்னரும் அரசு சாதகமான பதில் அளிக்காவிட்டால் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்துக்கும் தயாராக இருப்போம் என்றும் தெரிவித்தார்.
அவர் ஊடகங்களிடம் தெரிவித்த கருத்தில், பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரியாவும் ‘ஆசிரியர்களுக்கு இதற்கு எதிர்ப்பு இல்லை’ என கூறியது முற்றிலும் தவறானது எனக் கூறினார்.
கடந்த சில வாரங்களாக பாடசாலை தோறும் சென்று ஆசிரியர்களுடன் ஆலோசித்து வருகிறோம். பெரும்பாலானோர் இந்த முடிவுக்கு எதிராகவே உள்ளனர் எனவும் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: க.பொ.த. உயர்தர (AL) பரீட்சைகள் முடிந்த பின் டிசம்பர் 8ஆம் தேதி பாடசாலை திறக்கும் நாளில் ஒரு நாள் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும்.
அதற்குப் பின்னரும் அரசாங்கம் பதிலளிக்காவிட்டால் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் தவிர்க்க முடியாது.
எனினும், A/L பரீட்சை பணிகளில் எந்தவித தடை ஏற்படுத்தமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கல்வி அமைச்சு ஜனவரி 2026 முதல் பாடசாலை நேரத்தை காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நீட்டிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என மறுபடியும் உறுதி செய்துள்ளது.
கல்வி அமைச்சு செயலாளர் நளக கலுவேவா தெரிவித்ததாவது, இந்த மாற்றம் தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) பரிந்துரையின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
அந்நிறுவகம் ஆரம்பத்தில் ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு மணி நேரம் வழங்க பரிந்துரைத்திருந்தது.
எனினும், நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு அதை 50 நிமிடங்களாகக் குறைக்க அமைச்சு கேட்டுக்கொண்டது. இதனால் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி வரை நீட்டிக்கப்பட வேண்டியுள்ளது என்று விளக்கமளித்தார்.

