விஸ்வாவசு வருடம் சித்திரை முதல் நாள், இன்று திங்கட்கிழமை (14) அதிகாலையில் சூரியன் மேஷ ராசியில் 3:21 மணி அளவில் பிறந்திருக்கின்றது.
இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள ஆலயங்களில் இன்று (14) விசேட வழிபாடுகள் நடைபெற்றுவருவதுடன் பெருமளவான மக்கள் வழிபாடுகளில் கலந்துகொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயம்
தமிழ் – சிங்ள சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
சுபவேளையில் மாமாங்கேஸ்வரருக்கு மருத்துநீர் வைக்கப்பட்டு விசேட அபிசேகம் நடாத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மாமாங்கேஸ்வரருக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.
ஆலயத்தின் பிரதகுரு சிவஸ்ரீ பூரண சுதாகரன் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த வழிபாடுகளின்போது நாட்டில் துன்பம் நீங்கள் நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ விசேட பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது ஆலயத்தில் சித்திரைப்புத்தாண்டை குறிக்கும் வகையில் கைவிசேடமும் ஆலயத்தினால் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நீர்கொழும்பு சித்தி விநாயகர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு
தமிழ், சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நீர்கொழும்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் திங்கட்கிழமை (14) காலை இடம் பெற்றன.
விஜிதாகரன் சர்மா குருக்கள் தலைமையில் நடைபெற்ற விசேட பூஜையில் அதிக எண்ணிக்கையான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவிலில் விஷேட பூஜை
மலர்ந்துள்ள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு , வரலாற்று சிறப்பு மிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவிலில் விஷேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
திங்கட்கிழமை (14) காலை ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து காலை 6.45 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , காலை 07 மணிக்கு வேல் பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் புத்தாண்டு நிகழ்வுகள்
மலர்ந்துள்ள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் புத்தாண்டு நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன.
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சித்திரை புத்தாண்டு சிறப்பு பூஜை
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ‘விசுவாவசு’ சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் திங்கட்கிழமை (14) காலை முதல் ஆலய பிரதம குரு கருணாநந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
காலை 4:00 மணியளவில் சுப்ரபாதமும், 5 மணியளவில் உசற்காலப் பூசையும், 5:15 மணியளவில் சங்கற்பம், அபிஷேகமும், 6 மணியளவில் சுற்றுப் பூசைகளும், 6:15 மணியளவில் வசந்த மண்டப பூசையும் 6:45 மணி அளவில் சங்கிராந்தி அபிஷேகமும் இடம் பெற்றது.
அதை தொடர்ந்து 7:30 மணியளவில் கை விசேஷமும் வழங்கப்பட்டு 8:15 மணியளவில் பொங்கல் வழந்து வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் இடம்பெற்றது.
இதன் போது மன்னார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அடியவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும் மாவட்டத்தின் பல பாகங்களில் உள்ள இந்து ஆலயங்களில் விசேட புத்தாண்டு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்>பொதுமக்களிடம் சுகாதாரத்துறை விடுத்துள்ள வேண்டுகோள்!

