தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட மசோதா மற்றும் தமிழ்நாடு பொது கட்டட உரிம திருத்தச் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து ஆளுநர் அரசாணை வெளியிட்டுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் ரவி குறித்த காலத்தில் முடிவெடுக்காமல் இருந்ததால் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தமிழக பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட பத்து மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டத்துக்கு எதிரானது என்றும், மாநில அரசின் ஆலோசனைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
மேலும், ‘தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்கள் மீது ஆளுநர் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுகின்றன.
இந்த மசோதாக்கள் சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டு ஆளுநரிடம் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து அங்கீகரிக்கப்பட்டதாகக் கருத்தில் கொள்ளப்படும்’ என்று தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த 10 மசோதாக்களில் பல்கலைக்கழக வேந்தா் பொறுப்பிலிருந்து ஆளுநரை நீக்க வகை செய்யும் மசோதாவும் அடங்கும்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் ஆளுநரின் ஒப்புதல் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சட்ட மசோதாக்கள் சட்டமானதாக அரசிதழில் தமிழக அரசு அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்>ஜம்மு – காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலில் 27 பேர் பலி! https://www.youtube.com/@pathivunews/videos

