சாலைகள் குண்டும் குழியும் இல்லாமல் அதிக செலவில் போடப்படுவது, வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்பதற்காகத்தான்.
ஆனால் பீகார் மாநிலத்தில் 100 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சாலையில், பெரிய பெரிய மரங்கள் அச்சுறுத்தும் வகையில் கம்பீரமாக மிரட்டும் தோணியில் நிற்பதால், வாகன ஓட்டிகள் உயிரை கையில் பிடித்து வாகனம் ஓட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பாட்னா- கயா பிரதான சாலையில் ஜெஹனாபாத்தில் சுமார் 7.48 கி.மீ. நீளம் கொண்ட சாலையில் மரங்கள் நிற்கின்றன. மாவட்ட நிர்வாகம் 100 கோடி ரூபாய் சாலை விரிவாக்கம் செய்ய முடிவு செய்தது. இதனால் வனத்துறையை அணுகி மரங்களை வெட்ட அனுமதி கேட்டுள்ளது.
ஆனால் வனத்துறை மரங்களை வெட்ட அனுமதி வழங்கவில்லை. அதற்குப் பதிலாக 14 ஏக்கர் நிலத்திற்கு இழப்பீடு கேட்டுள்ளது. ஆனால், மாவட்ட நிர்வாகம் இழப்பீடு கொடுக்க மறுத்துவிட்டது. இதனால் இப்படி ஒரு விபரீத முடிவை மாவட்ட நிர்வாகம் எடுத்து, மரத்தை சுற்றி சாலை அமைத்துள்ளனர்.
இந்த மரங்கள் ஒரே நேர்க்கோட்டில் இருந்தால் பரவாயில்லை ஒன்றுக்கொன்று குறுக்காக உள்ளதால் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

