ஒரு நாளுக்கு 3.65 அமெரிக்க டொலருக்கு குறைவான வருமானத்தை ஈட்டும் மக்களின் விகிதம் கடந்த 2024ஆம் ஆண்டு சுமார் நான்கில் ஒரு பகுதி மக்களைப் பாதித்துள்ளது.
இது 2021இல் இருந்ததைவிட இருமடங்கு அதிகமாக உள்ளது.
இந்த நிலைமை, 2000களின் தொடக்கத்தில் இருந்த உயர்ந்த வறுமை நிலையை மீண்டும் நினைவூட்டுகின்றது.
இந்த தகவல்கள், வறுமை பகுப்பாய்வு மையமான CEPA வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு மீண்டும் நிலைமையை ஒரளவுக்கு சீரமைத்துள்ளதாலும், தற்போதைய நிலைமை திரும்பும் அபாயமும் இருப்பதாலும், அரசாங்கம் மிக கவனமாக செயல்பட வேண்டியது அவசியம் என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
அறிக்கையில், நிலையான பொருளாதார வளர்ச்சிக்காக பெரிய மாற்றங்கள் தேவைப்படும் எனவும், வறுமையை குறைக்கும் நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
வறுமை நீக்க நடவடிக்கைகள் இல்லாமல் வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்வது பயனற்றதாக இருக்கும் என அறிக்கையை தயாரித்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அறிக்கையை தயாரித்த சுயாதீன வளர்ச்சி ஆய்வுக் குழுவினர், இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்களை பாராட்டியுள்ள போதிலும், வறுமை நீக்கம், வேலைவாய்ப்பு, சர்வதேச வர்த்தகத்தில் பங்கு, தொழில்நுட்ப வளர்ச்சி, விவசாயம், சுற்றுலா மற்றும் தொழிற்துறை வளர்ச்சி ஆகியவற்றில் திட்டமிட்ட மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கை ஏற்கனவே கடும் நெருக்கடி ஒன்றிலிருந்து மீண்டு வருவதால், இப்போது கொள்கை ரீதியான தெளிவும், நடவடிக்கைகளும் மிகவும் அவசியமானவை எனவும், மக்கள் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைய அரசாங்கம், தனியார் துறை, நிறுவனங்கள், பொதுமக்கள் என அனைவரும் இணைந்து செயல்பட வேண்டியதையும் அறிக்கை வலியுறுத்துகிறது.

