வளர்ச்சி பெறும் நாடுகளுக்கான வர்த்தகத் திட்டமான Developing Countries Trading Scheme (DCTS) மூலம், இலங்கையின் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு மிகுந்த ஆதாயம் கிடைக்கும் வகையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன
புதிய திட்டத்தின் மூலம் இலங்கை உள்ளிட்ட நாடுகள் விரிவான வட்டாரங்களில் இருந்து மூலப்பொருட்களை பெற்றுத் தயாரிக்கும் ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை 0 வீத வரியுடன் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
குறிப்பாக ஆடைகள் துறைக்கு இது ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
2026 முதல் நடைமுறைக்கு வரும் இந்த மாற்றங்கள் இலங்கையில் ஏராளமான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையிலும், நாட்டு வர்த்தக வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும் வகையிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து இலங்கையின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி சந்தையாக இருந்து வரும் நிலையில், ஆண்டுக்கு 675 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை ஆடைகள் துறை மட்டுமே ஈட்டுகிறது.
இந்த மாற்றத்தின் மூலம் அந்தத் தொகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை ஆடைகள் துறையின் மொத்த ஏற்றுமதியில் 15 வீத பகுதி இங்கிலாந்துக்கு சென்றடைவது குறிப்பிடத்தக்கது.
இந்த மாற்றம் பற்றிய அறிவிப்பை தொடர்ந்து இங்கிலாந்தின் இலங்கைத் தூதுவர் ஆண்ட்ரூ பாக்ரிக், ‘இது இலங்கை உற்பத்தியாளர்களுக்கும், இங்கிலாந்து நுகர்வோருக்கும் வெற்றியாகும்.
தரமான பொருட்களை இலகுவாகவும் மலிவாகவும் பெற இத்திட்டம் உதவும்.
ஆடைகள் துறையைத் தாண்டியும் பல துறைகள் இந்த வர்த்தக சலுகைகளால் பயனடைய வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கைத் துணி தொழிற்துறை ஒன்றியத்தின் செயலாளர் யோஹான் லாரன்ஸ், ‘இந்தத் திட்டம் எங்கள் துறைக்கு திருப்புமுனையாக அமையும்.
நாங்கள் இங்கிலாந்து அரசுடன் தொடர்ச்சியாக பணியாற்றி வந்துள்ளோம்.
தற்போது உருவான புதிய சலுகைகள் தொழிலாளர்களின் வாழ்க்கையை பாதுகாத்து,
சந்தைப் போட்டியில் ஈடுபட உதவும்’ என தெரிவித்துள்ளார்.
(DCTS) திட்டம் 2023 இல் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிறகு தொடங்கப்பட்ட ஒரு முக்கிய வர்த்தகத் திட்டமாகும்.
தற்போது 65 நாடுகளை உள்ளடக்கிய இந்த திட்டம், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஆயிரக்கணக்கான பொருட்களில் குறைந்தது அல்லது இலவசமான வரி வசதிகளை வழங்குகிறது.
இந்த புதிய மாற்றங்கள் அந்த சலுகைகளை மேலும் விரிவாக்கும் வகையில் அமைகின்றன.
இங்கிலாந்து அரசு, (DCTS) திட்டத்துக்கு அப்பாற்பட்டும் இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு பயிற்சி, தரச்சான்றுகள், டிஜிட்டல் சந்தைப்படுத்தல் மற்றும் பெண்கள் முன்னேற்ற திட்டங்கள் போன்றவற்றை வழங்கும் திட்டங்களை தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த மாற்றங்கள் மூலம் இலங்கையின் உற்பத்தித் திறன், வேலைவாய்ப்பு, மற்றும் உலக சந்தையில் போட்டியிடும் நிலைமை ஆகியவை பெரிதும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

