வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் மற்றும் இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோலஸ்சுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இலங்கையில் தனது பணிக்காலம் அடுத்த மாதத்தில் முடிவடையவுள்ளதாகத் தூதுவர் ஆளுநரிடம் இதன்போது தெரிவித்தார்.
இதுவரை வழங்கிய ஒத்துழைப்புக்கும், கனேடிய அரசாங்கத்தின் உதவிகளுக்கும் ஆளுநர் நன்றியை தெரிவித்தார்.
அவ்வேளை, வடக்கு மாகாணத்தில் காணி தொடர்பான பிரச்சினைகள், குறிப்பாக வன்னி பிராந்தியத்தில் நிலவும் நிலைமைகள் குறித்து ஆளுநர் கவலை தெரிவித்தார்.
போர் காரணமாக ஆவணங்கள் அழிந்தமை மற்றும் கூகுள் வரைபடத்தின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட நில அளவைகள் போன்றவை நில உரிமைப் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கான தீர்வுக்கான தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து அவர் தூதுவருக்கு விளக்கமளித்தார்.
இதுபோன்ற பிரச்சினைகள் வடக்கிற்கு மட்டும் அல்லாமல் நாட்டின் பல பகுதிகளிலும் காணப்படுவதாக தூதுவர் பதிலளித்தார்.
மேலும், 2019ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத் திட்டங்கள் இன்னும் நிறைவடையவில்லை என்றும், அதனை முழுமைப்படுத்துவதற்காக மேலதிக உதவிகள் தேவைப்படும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.
பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பலர் உற்பத்தி முயற்சிகளில் ஈடுபடுகின்றனர் என்பதையும், அவர்களுக்கு ஏற்றுமதி சந்தைகளை உருவாக்கிக் கொடுக்க உதவி தேவை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
வேலைவாய்ப்பு பற்றாக்குறை ஒரு முக்கிய சவாலை உருவாக்குகிறது என்றும், விவசாய மற்றும் கடல் உற்பத்திகளை மூலப் பொருட்களில் இருந்து பெறுமதி சேர்த்த உற்பத்திகளாக மாற்றும் தொழிற்சாலைகள் வடக்கில் அமைக்க கனேடிய வாழ் மக்களை முதலீடு செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்றும் ஆளுநர் கோரிக்கை வைத்தார்.
அத்துடன், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய விரிவாக்கம், வடக்கு முதலீட்டு வலயங்கள் போன்ற முன்னேற்றத் திட்டங்கள் பற்றியும் தூதுவர் ஆர்வத்துடன் கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

