போர் முடிவடைந்து பதினாறு ஆண்டுகளாகியும், தமிழ்மக்கள் தங்களின் சொந்த நிலங்களுக்கு திரும்ப முடியாததற்கு தற்போதைய அரசு மற்றும் கடந்த அரசுகள் பொறுப்பாளிகள் எனக் கடுமையாக விமர்சித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
யாழ்ப்பாணம் வலிகாமத்தில் உள்ள அதிஉயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் படையினரால் கைப்பற்றப்பட்ட நிலங்களை விடுவிக்கக் கோரி, ஜனாதிபதி செயலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், ‘அதிஉயர் பாதுகாப்பு வலயம்’ என்ற பெயரில் சட்டரீதியான ஏற்பாடுகள் இல்லாமலேயே எக்கச்சக்கமான காணிகள் பிடிக்கப்பட்டுள்ளன. யாழ் மாவட்டத்தில் மட்டும் 30 வீத நிலப்பரப்புகள் இந்த வகை அபகரிப்புகளுக்குள்ளாகியுள்ளன என்றார்.
இந்த நிலங்கள் சட்ட ஒழுங்குகள் இன்றி அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளன என அவர் குற்றம் சாட்டினார்.
சமாதான பேச்சுவார்த்தைகளின் போது, இந்திய இராணுவ அதிகாரி நம்பியாரின் பரிந்துரைகளுக்கிணங்க பாதுகாப்பு வலயங்கள் குறித்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என அரசு உறுதியளித்த போதும், அது நடைமுறைக்கு வரவில்லை எனவும் தெரிவித்தார்.
இன்றுவரை தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் இல்லாமல் போயிருக்கும்போதும், பாதுகாப்பு வலயங்களை அகற்றுவதில் அரசு நடவடிக்கையற்றது என்பது பெரும் கேள்விக்குறி எனக் கூறினார்.
தெற்கில் இதுபோன்ற நில அபகரிப்பு நிகழ்ந்திருந்தால், அந்த அரசாங்கம் மக்கள் எழுச்சியால் முற்றாக வீழ்த்தப்பட்டிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வடகிழக்கில் நீண்ட காலமாக நீடித்து வரும் இந்த நில அபகரிப்பு செயற்பாடுகள் முற்றிலும் தவறானவையாகும் என்றும், பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு வருவதை கண்டித்து அரசுக்கு எதிராகக் கண்காணிப்பு மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடரும் என அவர் எச்சரித்தார்.

