அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் அறுகம் குடா சுற்றுலா தளத்தில் மேலாடை இன்றி நிர்வாணமாக வீதியில் நடந்த 26 வயது தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு, 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வாரங்கள் மற்றும் ஒருமாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பை பொத்துவில் நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (15) வழங்கியுள்ளது.
நேற்று திங்கட்கிழமை (14) பிற்பகல், குறித்த பெண் அறுகம் குடா சுற்றுலா தளத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து மற்றொரு ஹோட்டலுக்குள் மேலாடை இன்றி நிர்வாணமாக நடந்து சென்றார். இது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியது.
இச்சம்பவம் குறித்து பொத்துவில் பொலிஸ் மகளிர் பணியகத்திற்கு தகவல் கிடைத்ததையடுத்து, உடனடியாக விசாரணை மேற்கொண்டு அந்த வெளிநாட்டு பெண்ணை கைதுசெய்தனர்.
பொலிஸாரின் விசாரணைகளில், அந்தப் பெண் தனது காதலனுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக மனநிலை பாதிப்புக்கு உள்ளாகி இவ்வாறு செயற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் விசாரணை முடிவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த பெண்ணுக்கு, 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வாரங்கள் மற்றும் ஒரு மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

