வடமேல் மாகாணத்தில் பாடசாலைகளுக்கான அதிபர் இடமாற்றக் கொள்கை முறையாக அமல்படுத்தப்படவில்லை என தெரிவித்து, இலங்கை அதிபர்கள் சங்கம் (Ceylon Principals’ Union – CPU) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார் செய்துள்ளது.
அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் பியாசிரி பெர்னாண்டோ தெரிவித்ததாவது,
அவர் பணியாற்றும் பாடசாலை வடமேல் மாகாண சபையின் கீழ் உள்ளது என்றும், 2012ஆம் ஆண்டு முதல் அந்த இடமாற்றக் கொள்கையை சட்டப்படி நடைமுறைப்படுத்தப் போவதற்காக முயற்சி மேற்கொள்ளப்பட்டுவந்ததாகவும் கூறினார்.
அரசியல் தலையீடுகள் இருந்தபோதிலும், சரியான நடைமுறைக்கு வழிவகுக்கும் சூழல் ஒன்றை உருவாக்க முடிந்ததெனவும், அதற்காக அதிகாரிகளுடன் ஒத்துழைப்பும் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது, மாகாணக் கல்வி திணைக்களம் மற்றும் வலயக்; கல்வி அலுவலகங்களில் பணியாற்றும் சில அதிகாரிகள், அந்த நடைமுறையைத் திசைதிருப்பும் வகையில் செயற்படுவதாகவும், சட்டப்பூர்வமற்ற நடவடிக்கைகளை எதிர்த்து வரும் தொழிற்சங்கத் தலைவர்கள் இலக்காகக் கொள்ளப்படுவதாகவும் பெர்னாண்டோ குற்றம் சுமத்தியுள்ளார்.
தான் தொழிற்சங்கத் தலைவராக, இடமாற்றங்களில் காணப்படும் முறைகேடுகளை எதிர்த்து வருபவராக இருக்கும்போது, சில அதிகாரிகள் அச்சுறுத்தல்களையும் தடைகளையும் உருவாக்கும் நிலை காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து, அந்த விடயத்தை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார் அளிக்க நேர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த வடமேல் மாகாண கல்வி கூடுதல் பணிப்பாளர் யு.பி. உயங்கொட, மாகாணத்தில் எட்டு கல்வி வலயங்கள்; இருப்பதாகவும், அதிபர் ஒருவருக்கான அதிகபட்ச சேவைக்காலம் எட்டு ஆண்டுகளாகவும், துணை அதிபருக்கு ஆறு ஆண்டுகளாகவும் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
இந்த கால வரம்புகளை மீறியவர்களின் விவரங்கள் வலய அலுவலகங்களால் அனுப்பப்படும் என்றும், அதனை அடிப்படையாகக் கொண்டு இடமாற்றங்கள் நடை பெறுவதாகவும் அவர் விளக்கினார்.
மேலும், காலிப் பணியிடங்கள் ஏற்படும் போது இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும், அதன்படி அதிபர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அவர் கூறினார்.
பெர்னாண்டோ முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அவர் அதிபர் இடமாற்றங்களுக்கு அமைந்த மேம்புற குழுக்களில் பங்கேற்றுள்ளார் என்பதால், எந்தவொரு அவமதிப்பும் ஏற்பட்டிருந்தால் அதை அவ்வழியாகவே தெரிவிக்கலாம் என்றும், தற்போது வரை உத்தியோகப்பூர்வ முறையில் எதுவும் பெறப்படவில்லை எனவும் உயங்கொட தெரிவித்தார்.

