வவுனியா பிரதேச செயலகத்தின் பண்பாட்டு விழாவை முன்னிட்டு, தமிழர் மரபு, பண்பாடு மற்றும் கலாசாரத்தை முன்னிறுத்தும் வகையில் ஊர்திப் பவனி இன்று பிரதேச செயலக முன்றலில் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது.
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன், வவுனியா பிரதேச கலாசார பேரவையும் கலாசார அதிகார சபையும் இணைந்து இந்த பவனியை ஏற்பாடு செய்தன.
பிரதேச செயலாளர் இ. பிரதாபன் தலைமையில் ஆரம்பமான பவனி, வவுனியா பிரதேச செயலகத்திலிருந்து தொடங்கி, கண்டி வீதி, பசார் வீதி, மணிக்கூட்டு கோபுர சந்தி, புகையிரத நிலைய வீதி, குருமன்காடு, மன்னார் வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் செயலகத்திலே நிறைவடைந்தது.
தமிழர் பாரம்பரியம், வரலாறு, தொல்லியல், விவசாயம், நீர்பாசனம், உணவு தயாரித்தல், கைவினை, வழிபாடு, சடங்குகள், கிராமிய கலை மரபுகள் போன்ற 47 க்கும் மேற்பட்ட அம்சங்களை பிரதிபலிக்கும் ஊர்திகள் பவனியில் பங்கேற்றன. கிராம மக்களின் செயற்கை ஒத்துழைப்பும் இதில் இடம்பெற்றது.
பவனியில் வடமாகாண கல்வி மற்றும் பண்பாட்டலுவல்கள் செயலாளர் பற்றிக் நிரஞ்சன், வவுனியா அரச அதிபர் பீ.ஏ. சரத் சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் நா. கமலதாசன், வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் த. முகுந்தன், பிரதி பணிப்பாளர் அமல்ராஜ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், மதகுருமார்கள், சமூக மற்றும் சமய அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராமிய மக்கள் எனப் பெருந்திரளானோர் பங்கேற்றனர். வீதிகளில் கூடிய மக்கள் உற்சாகத்துடன் பவனியை பார்த்து உற்சாகம் தெரிவித்தனர்.

