இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலையை உறுதிப்படுத்தும் புதிய ஆதாரங்கள் வெளியாகியிருக்கும் நிலையில், 1983ஆம் ஆண்டின் ‘கறுப்பு ஜூலை’ வலிகளை மீண்டும் நினைவூட்டுவதாகக் கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லியர் தெரிவித்துள்ளார்.
கறுப்பு ஜூலை நினைவு நாளை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில், தமிழ் பாரம்பரியத்துடன் கூடிய கனேடியர்கள் இந்த நிகழ்வை நினைவுகூரும் வேளையில், இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான வன்முறையின் ஈவிரக்கமற்ற வரலாறு மீண்டும் எதிரொலிக்கின்றது என அவர் கூறினார்.
செம்மணி பகுதியில் நடக்கும் அகழ்வுப் பணிகளில் தற்போது வரை பெருமளவான தமிழர்களின் எச்சங்கள், குறிப்பாக கைக்குழந்தைகள் உட்பட மனித உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
வழமையான கட்டுமானப் பணியாக ஆரம்பிக்கப்பட்டது, அதிர்ச்சி தரும் மனித புதைகுழி கண்டுபிடிப்பாக மாறியது.
பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் நிலத்திற்கடியில் புதைக்கப்பட்ட உடல்களை கண்டுபிடித்தனர்.
நீதிமன்ற உத்தரவுகளின்பேரில் தொடரும் அகழ்வுகளில் கண்கள் கட்டப்பட்ட நிலையில் கொல்லப்பட்டவர்கள், சிறுவர்கள், அவர்களுக்கான விளையாட்டு பொருட்கள், புத்தகப்பைகள், ஆடைகள் உள்ளிட்ட பல சான்றுகள் வெளிப்பட்டுள்ளன.
இது ஈவிரக்கமற்ற கொடூரத்தைத் தெளிவாக காட்டுகிறது.
செம்மணி மனித புதைகுழி, இலங்கையின் உள்நாட்டு போரின்போது பலர் காணாமல் போனது தற்செயலான விஷயம் அல்ல என்பதை நிரூபிக்கிறது.
தமிழர்கள் கட்டாயமாக அழைத்து செல்லப்பட்டு, மௌனமாக்கப்பட்டு, இரகசியமாக புதைக்கப்பட்டனர்.
இவ்வாறான பாரிய அநீதிகளை எதிர்த்து, உயிர்தப்பியவர்களுக்கு ஆதரவு வழங்குவதும், நீதிக்கான தேடலில் உறுதியாக இருப்பதுவும் கனடாவின் தார்மீக பொறுப்பாகும் என பியர் பொய்லியர் வலியுறுத்தினார்.
உலகெங்கும் உள்ள தமிழர்களின் நீண்டநாள் வலிகளுக்கு நியாயம் நிலைநாட்டும் பொறுப்பு கனடா அரசிற்கு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

