சட்டவிரோத கட்டிடங்களுக்கு எதிராக நடைபெறும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவேண்டும் என்றும், அவை யாருடைய அழுத்தத்துக்காகவும் நிறுத்தப்படக்கூடாது என்றும் வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.
நேற்று (22-07) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்களுடனான மாதாந்தக் கலந்துரையாடலின் ஆரம்பத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சில உள்ளூராட்சி மன்றங்களில் முன்னேற்றம் காணப்படுவதைக் குறிப்பிட்ட ஆளுநர், மக்களுக்கான சேவையில் விரைவாகச் செயல்பட வேண்டிய அவசியம் இருப்பதாகவும், சோலைவரி மாற்றம், கட்டட அனுமதி போன்ற சேவைகளை விரைவாக வழங்குமாறும் கூறினார்.
உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன் வீதிப் பாதுகாப்பு மற்றும் கழிவு முகாமைத்துவம் குறித்து விளக்கமளித்தார்.
சுற்றுச்சூழல் பொலிஸாரின் சுற்றுக்காவல் எந்த வீதிகளில், எப்போது தேவை என்பதை உள்ளூராட்சி செயலாளர்கள் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும், அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
யாழ். மாநகர சபையில் நடைமுறைப்படுத்தப்பட்ட கழிவகற்றல் முறையை மற்ற உள்ளூராட்சி மன்றங்களிலும் விரிவுபடுத்த ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
மின்விளக்குகள் பொருத்தும் பணிக்காக 38 பேர் தேர்வாகி அவர்களின் பெயர்கள் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், பயிற்சிகள் விரைவில் ஆரம்பமாகும் என உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தெரிவித்தார்.
மேலும், தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான பயிற்சிகள் தொடங்கியுள்ளதுடன், பயிற்சிக்குப் பிந்தைய கட்டத்தில் சபைத்தலைவர்கள் மற்றும் மேயர்களுடன் சந்திப்பு நடைபெறும் என ஆளுநர் குறிப்பிட்டார்.
இந்தக் கலந்துரையாடலில் மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், ஆளுநரின் செயலாளர் சி.சத்தியசீலன், உள்ளூராட்சி செயலாளர் அ.சோதிநாதன், ஆணையாளர் தேவநந்தினி பாபு, யாழ் மற்றும் வவுனியா மாநகர சபை ஆணையாளர்கள், ஐந்து மாவட்டங்களின் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், நகர மற்றும் பிரதேச சபை செயலாளர்கள், சுற்றுச்சூழல் பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

