அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.
எனினும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரை கைது செய்ய பொலிஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கு சென்ற அதே விமானத்தில், தனிப்பட்ட தேவைக்காக நேற்று (28-07) நாமல் ராஜபக்ஸ வெளிநாடு சென்றிருந்தார்.
2017ஆம் ஆண்டு அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற போராட்டத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டின் கீழ், நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கு நேற்று அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நாமல் ராஜபக்ஸ நீதிமன்றத்தில் ஆஜராகாதமையால், அவருக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதேநேரம், அவர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மனுத்தாக்கல் செய்து, இன்று நீதிமன்றில் ஆஜராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

