2011ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்கள் லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பான ஆட்கொணர்வு மனுவைமூலம் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஸ சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
இவ்விவகாரம் தொடர்பான மேன்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தபோது கோட்டாபய ராஜபகஸ சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா நீதிமன்றத்தில் இத்தகவலை அறிவித்தார்.
இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க முடியாது என்பதால், அதற்கு பதிலாக கொழும்பிலுள்ள நீதிமன்றமொன்றில் சாட்சியமளிக்கத் தயார் எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு, இந்த கோரிக்கையை ஒரு வாரத்திற்குள் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து தேவையான உத்தரவைப் பெற நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தியது.
மனுதாரர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி நுவான் போபகே இதற்கான இணக்கத்தை தெரிவித்தார்.
இந்த மையக் கோரிக்கையின் அடிப்படையில், மேன்முறையீட்டு மனுவின் விசாரணையை நிறைவு செய்வதாக நீதியரசர்கள் குழாம் தீர்மானித்தது.
2011 டிசம்பர் 9ஆம் திகதி லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் காணாமல் ஆக்கப்பட்டதையடுத்து, அவர்களது உறவினர்கள் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.
சம்பவம் நடைபெற்ற காலப்பகுதியில் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபகஸவுக்கு, 2019இல் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க அறிவித்தல் அனுப்பப்பட்டது.
இதற்கு பதிலளிக்க கோட்டாபய, பாதுகாப்பு காரணங்களைக் காரணமாகக் காட்டி யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்குச் செல்ல முடியாது எனவும், அறிவித்தலை எதிர்த்து மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், கோட்டாபய ராஜபக்வுக்கு வழங்கப்பட்ட சாட்சிய அழைப்பை இரத்துசெய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து காணாமல் போனவர்களின் உறவினர்கள் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

