வடக்கில் போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் கடந்த மே மாதம் தொடங்கப்பட்ட அகழ்வில் இருந்து இதுவரை 115 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரணிதா ஞானராஜா தெரிவித்துள்ளார்.
இதில் 102 எலும்புக்கூடுகள் குழந்தைகள் உட்பட அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த புதைகுழி, இலங்கையில் மூன்றாவது பெரிய மனித புதைகுழியாகும்.
தடயவியல் தளம் 1-ல் ஒரு பெரிய எலும்புக்கூட்டின் அருகே, ஒரு குழந்தையின் எலும்புக்கூடு அரவணைத்த நிலையில் காணப்பட்டதாகவும், அது முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மனித எலும்புகளுடன் குழந்தை பால் போத்தல், பொம்மைகள், காலணிகள், பாடசாலை பைகள் உள்ளிட்ட சான்றுப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் எலும்புக்கூடுகள் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த, ஆகஸ்ட் 4ஆம் திகதி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஸ்கேன் இயந்திரத்தின் மூலம் பரிசோதனை நடைபெறவுள்ளது.
இக்காரணமாக ஜூலை 25ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி கோரப்பட்ட போதிலும், அதற்கான அனுமதி தேவையில்லை எனவும், பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றியே ஸ்கேன் பரிசோதனை நடத்தலாம் எனவும் ரணிதா ஞானராஜா தெரிவித்துள்ளார்.
இந்த அகழ்வுகள், தொல்பொருள் நிபுணரும் தடயவியல் பேராசிரியருமான ராஜ் சோமதேவா மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரியான செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றன.

