விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகள், எந்தவித தடயங்களும் கிடைக்காத நிலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில், ஏ-35 பிரதான வீதிக்கு அருகிலுள்ள தனியார் காணி ஒன்றில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் எனக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இன்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் இஸ்மாத் ஜமீல் முன்னிலையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த நடவடிக்கையில் பொலிஸார், இராணுவத்தினர், விசேட அதிரடிப்படை உறுப்பினர்கள் மற்றும் தொடர்புடைய திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
எனினும், அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெற்றபோதும், எந்தவிதமான தடயங்களோ அல்லது ஆயுதங்களோ கண்டுபிடிக்கப்படவில்லை.
இதனால், சம்பந்தப்பட்ட அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

