வடக்கில் உள்ள இனப்படுகொலை இராணுவத்தை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை புறக்கணித்ததன் விளைவாகவே முல்லைத்தீவு முத்தையன்கட்டு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் முத்தையன்கட்டு பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு தகரம் வழங்க அழைக்கப்பட்ட ஐந்து இளைஞர்கள் நேற்று இராணுவத்தினரால் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதில் நால்வர் தப்பியதோடு, ஒருவரைக் காணவில்லை என ஊர் மக்கள் தெரிவித்தனர்.
காணாமல் போன இளைஞர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த கொலையை இராணுவமே செய்ததாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழ் மக்களை ஆண்டாண்டு காலமாக கொன்ற இனப்படுகொலை இராணுவத்தின் கொலைவெறி இன்னும் அடங்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
வடகிழக்கில் இனப்படுகொலை இராணுவத்தை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்திய ரஜீவ்காந், இது மிகப்பாரதூரமான விடயமாக இருப்பதால் அந்தப் பகுதிக்கான இளைஞர்களின் பாதுகாப்பை அரசு உடனடியாக உறுதிப்படுத்தி, கொலைகாரர் எனக் குறிக்கப்படும் இராணுவத்தை உடனடியாக அகற்ற வேண்டும் எனக் கோரினார்.

