மன்னார் பஜார் பகுதியில், 2ஆம் கட்ட காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக மக்களின் தொடர் போராட்டம் இன்று ஒன்பதாவது நாளை எட்டியது.
பல்வேறு கிராம மக்களும் இதில் கலந்து தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, மன்னார் தீவுப் பகுதியில் காற்றாலை கோபுரங்களுக்கான பாகங்கள் கனரக வாகனங்களில் கொண்டு வரப்பட்டபோது, தள்ளாடி சந்தியில் மக்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதன் பின்னர் தள்ளாடி மற்றும் சுற்றுவட்டப் பகுதிகளில் பொது அமைப்புகள், மக்கள் சுழற்சி முறையில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
போலீஸ் பாதுகாப்புடன் பாகங்கள் நகரத்துக்குள் கொண்டுவரப்பட்டாலும், மக்களின் எதிர்ப்பு தளராத நிலையில் உள்ளது.
கிளியன் குடியிருப்பு, நடுக்குடா, கட்டுக்காரன் குடியிருப்பு, பருத்திப்பன்னை, பாவிலுப்பட்டான் குடியிருப்பு உள்ளிட்ட கிராம மக்கள் இன்று போராட்டத்தில் கலந்து கொண்டனர். மன்னார் மாவட்ட ஒளிக்கலை ஒன்றிய உறுப்பினர்களும் இதில் பங்கேற்றனர்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் முன்னாள் எம்.பி. செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் போராட்டத்தில் இணைந்தனர்.
மன்னார் பிரஜைகள் குழு, பொது மற்றும் சிவில் அமைப்புகளின் முழு ஆதரவுடன், உள்ளூர் மக்கள் மற்றும் இளைஞர்கள் இரவு பகல் பாராது போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.


