மன்னாரில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் 15வது நாளாக இன்று சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டது.
பள்ளிமுனை மற்றும் பெரிய கரிசல் கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் இன்று போராட்டத்தில் கலந்து, தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.
மன்னாரைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களும் இதன் ஒரு பகுதியாக பங்கேற்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டோர் தலையில் கருப்பு பட்டி அணிந்து, பல்வேறு வாசகங்கள் எழுத்தப்பட்ட பதாகைகளை ஏந்தி கோஷங்களுடன் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதில் தமிழ் முஸ்லிம் மக்கள், மத தலைவர்கள் மற்றும் அருட் சகோதரிகள் ஒன்றிணைந்தனர்.
மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் காலை முதல் நடைபெற்ற இந்த போராட்டம், புதிய காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்படும்வரை தொடரும் என்று ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.


