அம்பாறை மாவட்டம் நிந்தவூரில் கஞ்சா மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று திங்கட்கிழமை (18-08) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, நிந்தவூர் பகுதியைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிடிபட்டார்.
சந்தேக நபரிடம் இருந்து 4 கிலோ 320 கிராம் கஞ்சா மற்றும் 6 கிராம் 730 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதுடன், கைப்பற்றப்பட்ட சான்றுப்பொருட்களும், சந்தேகநபரும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக நிந்தவூர் பொலிஸ் நிலையத்துக்கு ஒப்படைக்கப்பட்டனர்.
இந்த நடவடிக்கை, அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச். கலனசிறியின் மேற்பார்வையில், மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் விக்கிரமரத்னவின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி கே.ஏ.எம். பிரியங்கரவின் தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நிந்தவூர் பொலிஸாரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

