இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியும் அவரது மனைவியும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (18-08) மாலை அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில், கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியின் இல்லத்தில் அமைந்திருந்த அலுவலகத்தில் இடம்பெற்றது.
சம்பவத்துக்கு முன்னர், ஒரு பெண் தனது வழக்கு தொடர்பாக நீதிபதியின் அலுவலகத்திற்கு சென்றபோது இலஞ்சம் கோரப்பட்டதாக குற்றஞ்சாட்டி, கடந்த மாதம் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
அந்த முறைப்பாட்டின் அடிப்படையில், இன்று மாறுவேடத்தில் அதிகாரிகள் குறித்த அலுவலகம் அருகில் காத்திருந்தனர்.
அப்போது முறைப்பாட்டை வழங்கிய பெண், ஆணைக்குழு அதிகாரிகளின் ஆலோசனைப்படி நீதிபதியிடம் இலஞ்சம் வழங்குவதாகக் கூறி, 300 ரூபாவை நீதிபதியின் மனைவியிடம் ஒப்படைத்தார்.
உடனடியாக அங்கு மறைந்து காத்திருந்த இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள், நீதிபதி மற்றும் அவரது மனைவியை கைது செய்து கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர் சிரேஷ்ட சட்டத்தரணியும் அகில இலங்கை சமாதான நீதிபதியுமான மருதமுனையைச் சேர்ந்த பளீல் மௌலானா அமீருல் அன்சார் ஆவார்.
அவர் கடந்த 01.03.2023 முதல் இலங்கை நீதிச்சேவை ஆணைக்குழுவின் நியமனத்தின் பேரில் இப்பதவியில் பணியாற்றி வந்தார்.
குறிப்பாக, காதி நீதிமன்றம் என்பது இலங்கையில் முஸ்லிம் தனியார் சட்டத்தின் கீழ் திருமணம், விவாகரத்து மற்றும் குடும்ப விவகாரங்களை விசாரிக்கும் நீதிமன்றமாகும்.

