மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் நேற்றிரவு கொடியேற்றத்தால் தொடங்கியது.
கிழக்கில் உள்ள மட்டக்களப்பின் வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆலயம், சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படுகிறது.
கதிர்காமக் கந்தன் ஆலயத்தில் இடம்பெறும் பூஜை முறைகளுக்குச் சமமாக, மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் உற்சவமும் கப்புறாளைகளால் வாய்கட்டப்பட்டு நடைபெறுவது தனித்துவமான சிறப்பாகக் கருதப்படுகிறது.
இலங்கையின் வரலாற்றுப் பதிகளில் இடம்பிடித்துள்ள இந்த ஆலயம், கந்தபுராண காலத்திலேயே தோற்றம் பெற்றதாக நம்பப்படுகிறது. புராணக் கதைகளின்படி, முருகப்பெருமானும் சூரபத்மனும் மோதிய போரில், முருகனின் வேல் ஆறு கூறுகளாகப் பிரிந்து சூரனை வதம் செய்ததாகக் கூறப்படுகிறது.
அந்த வேல்களில் ஒன்று கதிர்காமத்தில் தங்கியதோடு, மற்றொன்று மண்டூரிலும் தங்கியதாகக் கருதப்படுகிறது.
இவ்வாறான பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம், பக்தர்களின் பெரும் பங்கேற்புடன் ஆனந்தமிகு சூழலில் துவங்கியுள்ளது.

