தாய்லாந்து அமைச்சரவை, 10,000 இலங்கையர்களை வேலைக்கு அமர்த்த ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாட்டு மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட எல்லை மோதலால் கம்போடிய தொழிலாளர்கள் திரும்பிச் சென்ற நிலையில் ஏற்பட்ட தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகளின்படி, வயதான மக்கள் தொகையும் குறைந்து வரும் உள்ளூர் பணியாளர்களின் எண்ணிக்கையும் காரணமாக தாய்லாந்து, விவசாயம், கட்டுமானம் மற்றும் உற்பத்தித் துறைகளில் குறைந்தது 30 இலட்சம் வெளிநாட்டு தொழிலாளர்களை நம்பி வருகின்றது.
வேலைவாய்ப்புக்காக இலங்கையில் இருந்து 30,000 க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.
இவர்களில் முதல் கட்டமாக 10,000 பேர் தாய்லாந்திற்கு அனுப்பப்படுவார்கள் என்று தொழிலாளர் அமைச்சர் பொங்காவின் ஜங்ருங்ருங்ராங்கிட் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வேலைவாய்ப்பு திட்டத்தில் நேபாளம், பங்களாதேஷ், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் தொழிலாளர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த மாதம் தாய்லாந்து–கம்போடியா எல்லை மோதல் பல தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு கடுமையானதாக மாறியது.
அந்த மோதலில் குறைந்தது 43 பேர் உயிரிழந்ததோடு, 3 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்தனர்.
தற்போதைய நிலவரத்தில் இருநாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
மோதல் தொடங்குவதற்கு முன் 5.2 இலட்சத்திற்கும் மேற்பட்ட கம்போடியர்கள் தாய்லாந்தில் பணிபுரிந்தனர். இது அந்நாட்டின் வெளிநாட்டு தொழிலாளர் தொகையில் 12 சதவீதமாகும். ஆனால் சமீபத்திய பதற்றத்தினால் சுமார் 4 இலட்சம் கம்போடியர்கள் தாய்லாந்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதனால் தொழிலாளர் ஆதாரமாக இலங்கையின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் மட்டும் 3,14,786 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்றுள்ளனர் என்று அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
பொருளாதார நெருக்கடி பலரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேடச் செய்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகள் இலங்கையர்களின் முதன்மையான வேலை வாய்ப்பு தளமாக உள்ளன. மேலும் தென் கொரியா மற்றும் ஜப்பானிலும் பலர் வேலை புரிகின்றனர்.
இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் ஈட்டித் தரும் அந்நியச் செலாவணி, நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய ஆதாரமாக திகழ்கிறது.

