உற்பத்திப் பொருட்களை பெறுமதி சேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றுவதில் தாய்லாந்து சிறப்பாகச் செயல்படுகின்றது என்பதையும், அந்த அனுபவத்தை வடக்கில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்ய தாய்லாந்து முதலீட்டாளர்களை ஊக்குவிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் கேட்டுக்கொண்டார்.
உற்பத்திப் பொருட்களை பெறுமதி சேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றுவதில் தாய்லாந்து சிறப்பாகச் செயல்படுகின்றது என்பதையும், அந்த அனுபவத்தை வடக்கில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் பெய்ரூன் தலைமையிலான குழுவினர் கடந்த வெள்ளிக்கிழமை (22-08) மாலை ஆளுநர் செயலகத்தில் ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர்.
இந்நிலையில் தாய்லாந்து பொருட்களை மதிப்பூட்டிய உற்பத்திகளாக மாற்றுவதில் முன்னணியில் உள்ள நாடாகும் என ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
மிகுந்த அனுபவம் பெற்ற தாய்லாந்து, வடக்கில் முதலீடு செய்வதன் மூலம் விவசாய மற்றும் கடலுணவு துறைகளில் புதிய முன்னேற்றத்தை உருவாக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.
வடக்கு மாகாணம் விவசாயமும் கடலுணவும் நிறைந்த பகுதியாக இருந்தாலும், இவை போதுமான விலைக்கு சந்தையில் கிடைக்காததால் விவசாயிகள் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்.
இதனால், விவசாயத்தை கைவிடும் நிலையும் உருவாகியுள்ளது.
அதிக அளவில் உற்பத்தி கிடைக்கும் நேரங்களில் அதை பதப்படுத்தவோ, மதிப்பூட்டிய பொருட்களாக மாற்றவோ வாய்ப்புகள் இல்லாததே இதற்குக் காரணம் என ஆளுநர் விளக்கினார்.
இந்த குறையை தாய்லாந்து முதலீட்டாளர்கள் ஈடுகட்ட முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தூதுவர் பெய்ரூன், இந்த முன்மொழிவை சாதகமாக அணுகுவதாக தெரிவித்ததுடன், வேலை வாய்ப்பு தொடர்பிலும் கருத்து தெரிவித்தார்.
தாய்லாந்தில் பல இலங்கையர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்; அதுபோல் வடக்கு மாகாண இளைஞர்களும் அங்கு வேலை வாய்ப்புகளை பெற முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், சுற்றுலாத்துறையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்தும் தூதுவர் ஆராய்ந்தார். உட்கட்டுமான வசதிகள் தொடர்பிலும் அவர் ஆர்வம் காட்டினார்.
முல்லைத்தீவு மாவட்டம் வடக்கு மாகாணத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டார்.
போர் காரணமாக அந்த மாவட்டம் மேலெழுந்துவருவதில் இடர்பாடுகளை எதிர்கொள்கிறது.
போதுமான வளங்கள் இருந்தபோதும், அவற்றை பயனுள்ளதாகப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்புகள் குறைவாக உள்ளன என்றும் அவர் வலியுறுத்தினார்.

