மருத்துவர்களின் இடமாற்றத்தில் நிலவும் முறைகேடுகள் மற்றும் வைத்தியசாலைகள் மூடப்படக்கூடிய அபாய நிலை காரணமாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று காலை 8.00 மணி முதல் நாடளாவிய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
அதேவேளை, அவசர சிகிச்சை பிரிவுகள், மகப்பேறு வைத்தியசாலைகள், சிறுவர் வைத்தியசாலைகள், மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை, சிறுநீரக நோய் பிரிவுகள், இராணுவ வைத்தியசாலை, தேசிய மனநல வைத்திய நிறுவனம் போன்ற முக்கிய பிரிவுகளின் சேவைகள் இடையூறு இன்றிப் செயற்;படும் என சங்கம் அறிவித்துள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயம், மருந்து கொள்வனவில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள், தரமான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படாமை ஆகியவை இந்த போராட்டத்தின் முக்கிய காரணிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது மருத்துவர்களுக்கான இடமாற்றம் முறையற்ற வகையில் நடைமுறைக்கு வரும் நிலையில், இதன் விளைவாக நாடளாவிய ரீதியில் சுமார் 200 வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
எனினும், இந்த போராட்டம் சம்பள உயர்வு, கூடுதல் கொடுப்பனவு அல்லது சலுகைகளை கோரியதல்ல.
இலங்கையின் இலவச மருத்துவ சேவையை பாதுகாப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அரசாங்கம் முறையாக செயல்படும் என்ற நம்பிக்கையில்தான் சுகாதாரத்துறையினர் உட்பட மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.
எனவே அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்பட வேண்டும். ஆனால், எங்கள் போராட்டத்தை திசைதிருப்ப அரசாங்க தரப்பினரால் போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதை கவனிக்க முடிகிறது என்று சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
பணிப்புறக்கணிப்பு நடைபெறுவதற்கிடையிலும், அவசர சிகிச்சை சேவைகள் மற்றும் முக்கிய வைத்தியசாலைகளின் சேவைகள் வழக்கம்போல தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

