செம்மணி மனித புதைகுழிகளைச் சுற்றியுள்ள உண்மைகளை வெளிக்கொணர சர்வதேச விசாரணை அவசியம் என்பதை வலியுறுத்தி வரும் 29ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாரிய கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த போராட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பங்காளிக் கட்சித் தலைவர்களான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், தமிழீழ விடுதலைக் கழகத் தலைவர் த. சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், சமத்துவக் கட்சியின் பொது செயலாளர் முருகேசு சந்திரகுமார், ஜனநாயக போராளிகள் கட்சித் தலைவர் வேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அவர்களுடன் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரனும் பங்கேற்றனர்.
அவர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது, இலங்கையில் பல்வேறு இடங்களில் மனித புதைகுழிகள் கண்டறியப்பட்டுள்ளன.
அவற்றில் பெரும்பாலானவை வடக்கு மற்றும் கிழக்கில் அமைந்துள்ளன.
இந்த புதைகுழிகளில் புதைக்கப்பட்டவர்கள் யார், எவ்வாறு உயிரிழந்தனர் என்பது இதுவரை வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்படவில்லை.
தற்போது செம்மணி மனித புதைகுழிகளில் நடைபெறும் அகழ்வுப் பணிகளில் 140க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
அதில் சுமார் 90 வீதமானவை ஆடையற்ற நிலையில் இருந்தன. குழந்தைகளின் எலும்புக்கூடுகளும் அதில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்தச் சூழலில், அகழ்வுப் பணிகள் சர்வதேச நிபுணர்களின் கண்காணிப்பில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட விடயங்களில் சர்வதேச விசாரணைகள் அவசியம் என்றும் கோரி கையெழுத்து போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தலைவர்கள் வலியுறுத்தினர்.
தமிழர் அரசியல் பரப்பில் இயங்கும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளன எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

