முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவம் நாட்டை ‘ஒழுங்கற்ற ஆட்சிக்குள் இட்டுச் செல்கிறது’ என எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், பிணைக்கு உரியதல்லாத குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதியை கைது செய்து விளக்கமறியலில் வைப்பது பல்கட்சி ஜனநாயக அமைப்புக்கு எதிரானது என்றும், இலங்கையின் ஜனநாயக வாழ்க்கை முறைக்கு நேரடியான தாக்குதலாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கையில் மேலும், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ மற்றும் தனிப்பட்ட செலவுகளைத் தெளிவாகப் பிரித்துக் காட்டுவது சிரமமான ஒன்றாகும்.
விசாரணை இன்னும் நிறைவு பெறாத குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் முன்வைத்து முன்னாள் ஜனாதிபதியை விளக்கமறியலில் வைப்பது ஜனநாயக மதிப்புகளை பாதிக்கும் செயலாகும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
விக்ரமசிங்கவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கத்துடன் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்றும், விசாரணையை முன்னெடுக்க அவர் கைது செய்யப்பட வேண்டிய அவசியமே இல்லை என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
அதேவேளை, சட்ட மா அதிபர் திணைக்களம் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறதன் சான்றாக இச்சம்பவம் அமைகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘இந்த செயல்கள் தடையின்றி முன்னெடுக்கப்பட்டால், நமது மரபின் அடிப்படை மதிப்புகள் நிரந்தரமாக இழக்கப்படும் அபாயம் உள்ளது.
எனவே பொதுமக்கள் ஜனநாயக முறைகளுக்குள் அனைத்து வழிகளிலும் எதிர்த்து, சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும்’ என அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
இதனிடையே, எதிர்க்கட்சித் தலைவர்களின் அலுவலகத்தில் நேற்று (25-08) முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்தித்து நிலைமையை ஆராய்ந்தனர்.
இக்கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எம்.பிக்கள் ரவி கருணாநாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார, கபீர் ஹாஷிம், டாக்டர் கவிந்த ஜெயவர்தன, பலனி திகம்பரம், முன்னாள் எம்.பிக்கள் ருவன் விஜேவர்தன, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், சாகல ரத்நாயக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூட்டத்தில் உரையாற்றுகையில், ‘விக்ரமசிங்கவின் கைது தனித்த சம்பவம் அல்ல் ஜனநாயக அரசியலுக்கே எதிரான ஒரு தீவிர சவாலாகும்.
இதை எதிர்கொள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்’ எனக் கூறினார்.
அவர் குறுகிய மற்றும் நீண்டகால செயல் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த தேவையுள்ளதாக வலியுறுத்தினார்.
சிறிசேனவும் கருத்து வெளியிட்டபோது, ‘இப்போது இரண்டு முக்கிய பிரச்சினைகள் உள்ளன. ஒன்று – விக்ரமசிங்கவின் விடுதலையை உறுதி செய்ய வேண்டும்.
இரண்டு – நாட்டில் ஜனநாயக அரசியலுக்குள்ளான அச்சுறுத்தலை சமாளிக்க வேண்டும். இதற்காக எல்லா கட்சிகளும் தங்களது கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி ஒன்றிணைய வேண்டும்’ என்றார்.
கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து கட்சித் தலைவர்களும் ஒன்றிணைந்த செயல் அவசியம் என்பதை ஏற்றுக்கொண்டனர்.
மேலும் கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் பங்கேற்கும் சிறப்பு குழுவை அமைத்து அடுத்தடுத்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க தீர்மானிக்கப்பட்டது.
அவர்கள் மீண்டும் நாளை (27-08) எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் கூடிக் கலந்துரையாட தீர்மானித்துள்ளனர்.
கொழும்பு கோட்டை நீதவான்; நீதிமன்றம், கடந்த 22ஆம்திகதி சிஐடி கைதுசெய்த ரணில் விக்ரமசிங்கவை நேற்று (25) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
இவ்வழக்கு இன்று (26) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

