பரிந்துரைக்கப்பட்ட கல்வி சீர்திருத்தங்களுக்கு தேவையான செலவுகள் குறித்த துல்லியமான கணக்கீடு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சு, மொத்தச் செலவை ஒரே எணாகக் குறிப்பிட முடியாது என தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் நலக களுவேவா, ஊடகங்களிடம் பேசியபோது, கல்வி சீர்திருத்தங்கள் பல்வேறு செயல்முறைகளை உள்ளடக்கியதாக இருப்பதால், தேவையான நிதி அடுத்தாண்டு (2026) வரவு செலவு திட்டத்திலிருந்து வழங்கப்படும் என விளக்கினார்.
‘ஒவ்வொரு ஆண்டும் கல்விக்கான ஒரு தொகை ஒதுக்கப்படுகிறது.
அந்த நிதியை சீர்திருத்தத் திட்டத்துக்கேற்ப பயன்படுத்த வேண்டும்.
உதாரணமாக, பாடப்புத்தகங்கள் மாற்றப்படும் போது, அச்சிடலுக்கான பொது நிதியே அதற்குப் பயன்படுத்தப்படும்.
இவ்வருடம் மட்டும் பாடப்புத்தகங்களுக்காக 15 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது,’ என அவர் குறிப்பிட்டார்.
மேலும், கல்வி சீர்திருத்தங்கள் திட்டமிட்ட முறையில் செயல்படுத்தப்படும். அதற்கான நிதி, ஆசிரியர் பயிற்சி, பாடத்திட்ட மாற்றம் உள்ளிட்ட முக்கிய துறைகளுக்குத் திசைதிருப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
‘ஒரே எண் கூற இயலாது. சீர்திருத்த நடவடிக்கைகளின் தன்மைப்படி செலவுகள் பட்ஜெட்டில் பிரிக்கப்பட்டு வழங்கப்படும்,’ எனவும் அவர் கூறினார்.
இதற்கிடையில், இலங்கை ஆசிரியர் சங்கம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், சீர்திருத்தங்களுக்கு நிதி, மனிதவளம் மற்றும் மாணவர்களுக்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து எந்த மதிப்பீடும் வெளியிடப்படவில்லை என குற்றம் சாட்டியது.
2021ஆம் ஆண்டு தொடங்கிய கல்வி சீர்திருத்தங்களுக்காக ஏற்கனவே சுமார் 500 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும், தற்போதைய நிர்வாகம் அவற்றை தொடருமா அல்லது கைவிடுமா என்பது சந்தேகமுள்ளதாகவும், சங்கத் தலைவர் பிரியந்த பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
மேலும், உலக வங்கி போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து உறுதியளிக்கப்பட்ட நிதியைப் பெறும் நோக்கில், போதிய திட்டமிடல் இன்றி சீர்திருத்தங்கள் வேகமாக முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
அதேநேரம், அமைச்சு ஏற்கனவே சில ஆரம்ப சீர்திருத்த நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
அதன்படி, பொது கல்வி சாதாரண தரப் பரீட்சையில் பாடங்களின் எண்ணிக்கை ஏழாகக் குறைக்கப்படும்.
கணிதம், ஆங்கிலம், தாய்மொழி (சிங்களம்ஃதமிழ்), சமயம் அறிவியல் ஆகிய ஐந்து கட்டாயப் பாடங்களுடன், தொழில்நுட்பம், கலை, மேலாண்மை மற்றும் தொழில்முனைவோர், மனிதவியல் மற்றும் சமூக அறிவியல், அல்லது சுகாதாரம் மற்றும் உடற்கல்வி ஆகிய துறைகளில் இருந்து இரண்டு பாடங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
மேலும், தினசரி கற்பித்தல் நேரங்கள் ஏழாகக் குறைக்கப்பட்டு, ஒவ்வொரு பாடமும் 50 நிமிடங்கள் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

