Ceyloan British College – Sri Lanka மற்றும் Change For Students Community இணைந்து, சாதாரண மற்றும் உயர்தர பரீட்சைகளில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, கடந்த (24.08) அன்று வளத்தாப்பிட்டி நாவலர் வாசிகசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வு, இரு அமைப்புகளின் ஸ்தாபகரும் சம்மாந்துறை பிரதேசத் உப தவிசாளருமான வெ. வினோக்காந்; தலைமையில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், விழாவில் கலந்து கொண்ட சிறப்பு அதிதிகளுக்கும் பொன்னாடை, நினைவுச்சின்னங்கள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஹனிபா, பிரதேசத் தவிசாளர் மாகிர், சம்மாந்துறை வலயத்தின் பிரதி கல்விப் பணிப்பாளர் பரமதயாளன் உள்ளிட்ட பல கல்வியாளர்கள், சமூகப் பிரமுகர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
தலைமை உரையாற்றிய வினோக்காந்
‘படிக்காமல் வாழ்வதை விடப் பிறக்காமல் இருப்பது மேல்.
புத்தகத்தைப் பார்த்து தலைகுனிந்து கற்கும் கல்வியே, வாழ்வில் தலைநிமிரச் செய்கிறது.
கல்வியே உலகத்தை மாற்றக்கூடிய சக்தி’ எனக் கல்வியின் மகத்துவத்தை எடுத்துரைத்தார்.
மேலும், ஆபிரகாம் லிங்கன், கல்பனா சாவ்லா போன்ற உலகப் புகழ் பெற்றோருடன் தன் கிராமத்தைச் சேர்ந்த சாதனையாளர்களையும் ஒப்பிட்டு பாராட்டினார்.
கிராம மாணவர்கள் கல்வியில் உச்சம் தொட்டு முன்னேற வேண்டும் என்பதற்காக தன்னாலான உதவிகளைத் தொடர்ந்து செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரதேச செயலாளர் ஹனிபா, கற்றலில் சிரமப்பட்டபோதிலும் இலக்கை அடைந்த மாணவர்களின் கதைகளை எடுத்துக்கூறி, அவர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்நிகழ்வை நடத்தியமைக்கு பாராட்டுத் தெரிவித்தார்.
பிரதேசத் தவிசாளர் மாகிர் தனது உரையில்,
‘கல்வி என்பது யாராலும் பறிக்க முடியாத சொத்து. கல்வியால் சென்ற இடமெல்லாம் சிறப்பைப் பெறலாம்.
இக்கிராம மாணவர்கள் கல்வியில் முன்னேறுவதற்கு அயராது உழைத்து வரும் வினோக்காந் அவர்களைப் பாராட்டுகிறோம்.
இக்கிராம கல்வி வளர்ச்சிக்கு அவர் பெரும் துணை நிற்கிறார்’ எனக் கூறினார்.
இவ்வாறு மாணவர்களை உற்சாகப்படுத்தி, கல்வியில் முன்னேறச் செய்யும் நோக்கில் இத்தகைய பாராட்டு விழாவை ஏற்பாடு செய்தமைக்கு, நிகழ்வில் கலந்து கொண்ட பிரமுகர்கள் அனைவரும் ஸ்தாபகர் வினோக்காநதுக்கு நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.


