யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (28-08) யாழ்ப்பாண அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளம் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர், அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், மாவட்டச் செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதி உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
அபிவிருத்தி திட்டங்களை மையப்படுத்தி நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உரையாற்றியபோது, ஜனாதிபதி பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைந்துள்ளதாகவும், மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவது உறுதி எனவும் குறிப்பிட்டார்.
இதற்காக அரசாங்க உத்தியோகத்தர்களின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
அமைச்சர் மேலும், தற்போது டொலரின் பெறுமதி நிலைத்தன்மை அடைந்திருப்பதாகவும், நாட்டின் டொலர் கையிருப்பு 6.09 பில்லியனாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இவ்வாண்டில் இலங்கையை வந்தடைந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 25 இலட்சத்தை எட்டியிருப்பதும், நாடு அபிவிருத்திப் பாதையில் செல்வதற்கான அறிகுறியாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனடிப்படையில், நாட்டில் பாரிய அளவிலான அபிவிருத்தி மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், யாழ்ப்பாண அபிவிருத்திக்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், குறிப்பாக வீதி அபிவிருத்திக்காக மேலும் நிதி விடுவிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் அறிவித்தார்.
அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மட்டுமே நாட்டை முன்னேற்றப் பாதையில் கட்டியெழுப்ப முடியும் என அவர் வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தின் முக்கிய தேவைகள் மற்றும் நடந்து வரும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற நிலைமை தொடர்பாகவும் அமைச்சர் விரிவாக ஆராய்ந்தார்.

