பாதாள உலக கோஸட்டியினர் சிலர், இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேற்று (30-08) மாலை நாட்டுக்கு கொண்டு வரப்பட்டனர்.
அவர்களில் புகழ் பெற்ற குற்றவாளி மண்டினு பத்மசிறி என அழைக்கப்படும் ‘கெஹெல்பட்டறா பத்மே’ உட்பட பலர் அடங்குவர் என்று காவல் துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்காக இலங்கையிலிருந்து சிறப்பு காவல் துறை குழுவினர் நேற்று முன்தினமே ஜகார்த்தாவுக்கு அனுப்பப்பட்டு, அங்கு இந்தோனேஷியா அதிகாரிகளிடம் இருந்து குற்றவாளிகளை காவலில் பெற்று, இலங்கை நோக்கி விமானத்தில் ஏற்றி வந்துள்ளனர்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அடைந்தவுடன், இவ்வாறான ‘அதிகம் தேடப்பட்ட’ குற்றவாளிகள் வருகை தருவதை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கைது செய்யப்பட்டவர்களில் கெஹெல்பட்டறா பத்மே தவிர, ‘கமாண்டோ சலிந்தா,’ ‘பேக்கோ சாமன்,’ ‘தெம்பிலி லஹிரு,’ ‘குடு நிலந்தா’ போன்ற பிரபல கும்பல் உறுப்பினர்களும் அடங்குவர்.
அவர்கள் குற்றப்புலனாய்வு துறைக்கு (CID) கடுமையான பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இவர்களுடன் பயணம் செய்த ஒரு பெண்ணும் குழந்தையும் இந்தோனேஷிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
ஆனால், அவர்களுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகள் இல்லாததால், இருவரும் நேற்று மாலை இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டனர்.
இந்த கைது நடவடிக்கை, இலங்கை காவல்துறை, ஜகார்த்தா காவல்துறை மற்றும் இன்டர்போல் இணைந்து நடத்திய சிறப்பு வேட்டையின் பலனாகும்.
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலா, ‘தற்போது வெளிநாட்டில் தஞ்சம் அடைந்துள்ள குற்றவாளிகளில் 75 பேருக்கு இன்டர்போல் மூலம் ‘ரெட் நோட்டீஸ்’ பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதில் சுமார் 20 பேர் இலங்கை அதிகாரிகளால் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்’ என தெரிவித்துள்ளார்.

