மின்சார சட்டத்தில் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் நுகர்வோருக்கு கூடுதல் கட்டணச் சுமையைக் கொடுக்கக்கூடும் என மின்சார நுகர்வோர் சங்கம் எச்சரித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (29-08) ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், சங்கத்தின் பொதுச் செயலாளர் சஞ்சீவ தர்மிகா தெரிவித்ததாவது:
‘இந்த திருத்தங்கள் ஒப்பந்தக்காரர்களுக்கு நன்மை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் இதன் விளைவாக நுகர்வோருக்கு யூனிட் ஒன்றுக்கு குறைந்தது 5 சதம் வரை அதிக கட்டணம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இது ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ள விடுப்பு நிவாரணத் தொகையை சமன்படுத்துவதற்காக செய்யப்படலாம்’ என்றார்.
அவர் மேலும் கூறுகையில், இலங்கை மின்சார சபை நான்கு தனித்தனி நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதாகவும், தன்னார்வ ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு அதிகபட்சம் 50 லட்சம் ரூபா வரை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
சுமார் 5,000 ஊழியர்கள் வெளியேறினால், மொத்தமாக 2500 கோடி ரூபா வரை செலவாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த நிதியாண்டில் மின்சார சபை 500 கோடி ரூபா இலாபம் ஈட்டியுள்ளதாகவும், இந்த விடுப்பு நிவாரணச் செலவினங்கள் நுகர்வோரிடம் கட்டணமாக மாற்றப்படக் கூடாது என்பதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தர்மிகா வலியுறுத்தினார்.

