இளம் தலைமுறையினர் இந்தப் புதிய புகைபிடிக்கும் முறையில் அதிகம் ஈர்க்கப்பட்டுள்ளனர்.
சாதாரண சிகரெட்டுகளை ‘அசுத்தமானவை’ என கருதும் இளைஞர்களுக்காகவே, வேப் ஒரு நவீன மாற்றாக விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், இதற்கான சரியான சட்டரீதியான கட்டுப்பாடு இன்னும் இல்லாததோடு, அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் பொதுமக்களிடம் தற்போது தான் வெளிப்படத் தொடங்கியுள்ளன.
இந்த ஆண்டு தொடக்கத்தில் மது வருவாய் திணைக்களம் மற்றும் பொது நிதிக் குழுவுக்கு இடையே நடைபெற்ற விவாதத்தில், இலங்கையில் வேப் சட்டப்படி அனுமதிக்கப்பட்டதா என்பதில் தெளிவின்மை ஏற்பட்டது.
சிலர் அரசு வேப்பைத் தடை செய்துவிட்டதாக நம்பினாலும், நடைமுறையில் அது தவறான கருத்தாகும்.
தற்போது வேப்புகள் எளிதில் கிடைக்கின்றன, திறந்தவெளியில் பயன்படுத்தப்படுகின்றன, சமூக ஊடகங்களில் கூட விளம்பரப்படுத்தப்படுகின்றன.
மது வரி திணைக்களம் இதுவரை வேப் பொருட்களுக்கு எந்த உத்தியோகப்பூர்வ அனுமதியும் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.
ஆனால், பயனாளிகளை குற்றம் சாட்டக்கூடிய தனிப்பட்ட சட்டம் இல்லை என்றும் கூறியுள்ளது.
உலகின் பல நாடுகள் வேப் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
சில நாடுகள் அதனை முழுமையாகவோ பகுதியளவோ தடை செய்துள்ளன.
மேலும், வேப்புகளில் பயன்படும் பொருட்கள் தேசிய அல்லது சர்வதேச கட்டுப்பாட்டிற்குட்பட்டவையாக இருக்கக்கூடும் எனவும், ஐ.நா. அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
குறிப்பாக, வேப்புகள் புதிய வகை செயற்கை போதைப்பொருட்களை (கஞ்சா, கொகைன், எக்ஸ்டசி போன்றவற்றின் செயற்கை வடிவங்கள்)
உட்கொள்வதற்கான கருவியாக மாறும் அபாயம் இருப்பதாகவும் அவை வலியுறுத்துகின்றன.
சிங்கப்பூரில் இளைஞர்கள் வேப்பில் அதிகம் ஈடுபட்டதை அடுத்து, அந்நாடு கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
அங்கு வேப்பைப் பயன்படுத்துவோருக்கு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
எட்டோமிடேட் (நவழஅனையவந) எனப்படும் மயக்க மருந்தை வேப்பில் கலந்து கடத்துவோரைச் சட்டப்படி தண்டனை, அதிக அபராதம், நீண்டகால சிறைத்தண்டனை ஆகியன விதிக்கப்படுகின்றன.
2018ஆம் ஆண்டு சிங்கப்பூர் உலகில் முதன்முறையாகவேப்பைத் தடை செய்த நாடுகளில் ஒன்றாகும்.
சமீபத்தில் இளைஞர்கள் வேப்பைப் பயன்படுத்தும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியதை அடுத்து, அந்நாட்டு மக்களிடையே கடுமையான அச்சம் ஏற்பட்டது.
சிங்கப்பூர் சுகாதார அமைச்சர், ‘வேப்புகள் கடுமையான போதைப்பொருள் பழக்கங்களுக்கு வாயிலாக மாறிவிட்டன் அவை தற்போது போதைப்பொருள் கடத்தலுக்கான கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன’ என்று எச்சரித்தார்.
அந்நாட்டில் நேற்று தொடக்கம் (01-09) புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளது. சாதாரண வேப் வைத்திருந்தாலோ பயன்படுத்தினாலோ குறைந்தது 500 சிங்கப்பூர் டாலர் அபராதம் விதிக்கப்படும்.
எட்டோமிடேட் கலந்து வழங்கப்படும் வேப்புகளைப் பயன்படுத்துவோர் மற்றும் விநியோகிப்போர் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 15 சவுக்கடி தண்டனைக்கு உட்படுவார்கள்.
வெளிநாட்டினரும் இதே சட்டங்களுக்கு உட்பட்டவர்களாக இருப்பதோடு, வேலை அனுமதி, குடியிருப்பு உரிமை ரத்து செய்யப்படுவதற்கும், நாடுகடத்தப்படுவதற்கும் ஆளாகிறார்கள். சுற்றுலாப் பயணிகளுக்கும் இச்சட்டங்கள் பொருந்தும்.
சிங்கப்பூர் சட்டம் கடுமையாக்குவதில் மட்டும் நிற்கவில்லை. வேப் பயன்பாட்டைத் தடுக்க பொது விழிப்புணர்வையும் அதிகரித்துள்ளது.
பொதுச் சுகாதார பிரசாரங்கள், ஊடக அறிவிப்புகள், பள்ளிகளில் சுகாதார கல்வித் திட்டங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் சமூக மையங்களில் வேப் ஒழிப்பு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் தற்போது எட்டோமிடேட் கலந்த வேப்புகள் கண்டறியப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை.
ஆனால், அது ஒரு பழக்கமாக மாறுவதற்கு முன்பே, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
சர்வதேச சுகாதார நிபுணர்களின் ஆலோசனையை பின்பற்றி, சிங்கப்பூரின் எடுத்துக்காட்டைப் போலவே இலங்கையும் முன் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். காரணம், தடுப்பு எப்போதும் சிகிச்சையைவிட சிறந்ததாகும்.

