முல்லைத்தீவின் வட்டுவாகல் பால நிர்மாணப் பணிகள் இன்று நண்பகல் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களால் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருட காலம் பூர்த்தியாவதை முன்னிட்டு வட மாகாணத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களைத் தொடங்கி வைக்கும் நோக்கில் ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக இன்று காலை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் தென்னை முக்கோணத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அவர், பிற்பகல் 1 மணியளவில் வட்டுவாகல் பால நிர்மாணப் பணிகளையும் தொடங்கி வைத்தார்.
மிக நீண்டகாலமாக மக்களால் வலியுறுத்தப்பட்ட கோரிக்கையாக இருந்த வட்டுவாகல் பாலத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில், ஜனாதிபதியை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன் வரவேற்றார்.
பின்னர் பால நிர்மாணத்திற்கான பெயர்ப்பலகையை ஜனாதிபதி திறந்து வைத்து மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
இந்நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்றொழில் அமைச்சர் சந்திர சேகரம், பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்கள் இளங்குமரன், திலகநாதன், ஜெகதீஸ்வரன், ரவிகரன் உள்ளிட்டோர், திணைக்கள அதிகாரிகள், தவிசாளர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

