தேசிய மக்கள் சக்தியின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது என்று முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டம் யக்கலவில் அமைந்துள்ள தங்கள் கட்சி அலுவலகம் மீது நேற்று (2-09) நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கருத்து வெளியிட்ட அவர், ‘தேசிய மக்கள் சக்தியினர் எவ்வாறு சட்டத்திற்கு கட்டுப்படுகிறார்கள் என்ற நிர்வாணம் இந்த தாக்குதல் மூலம் வெளிப்பட்டுள்ளது’ என்றார்.
அவர் மேலும் கூறியதாவது, ‘அரசாங்கத்தைச் சேர்ந்த மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த பிரதியமைச்சர்கள் சிலருடன் எங்கள் யக்கலக் கட்சி அலுவலகத்துக்குள் பலவந்தமாக நுழைந்து தாக்குதல் நடத்தினர்.
இதில் ஒரு பெண் உட்பட நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அலுவலகத்தை கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் பயன்படுத்தி வருகிறோம்.
இருந்தும் திடீரென இது தங்களுக்கு சொந்தமானது என்று கூறி எங்கள் ஆதரவாளர்களை பலவந்தமாக வெளியேற்ற முயன்றுள்ளனர்.
உண்மையில் அலுவலகம் அவர்களுக்குச் சொந்தமானது என்றால், 13 ஆண்டுகளாக ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?
அலுவலகம் தொடர்பாக வழக்கு இருப்பதாக அவர்கள் கூறினால், நீதிமன்றத் தீர்ப்புடன் வரவேண்டும்.
நீதிமன்ற உத்தரவை அறிவிக்கக் கூடியவர் நீதிமன்ற பதிவாளர் மட்டுமே.
அதற்கான அதிகாரம் விஜித்த ஹேரத்திற்கோ, ரில்வின் சில்வாவிற்கோ வழங்கப்பட்டதா என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்
எங்கள் கட்சி அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல், தேசிய மக்கள் சக்தியின் உண்மையான நிலையை மக்களுக்கு வெளிப்படுத்தியுள்ளது.
அவர்கள் எவ்வாறு சட்டத்திற்கு கட்டுப்படுகிறார்கள், எவ்வாறு பொலிஸாரை பயன்படுத்தி செயற்படுகிறார்கள் என்பதை மக்கள் தெளிவாகக் கண்டுள்ளனர்’ என அவர் தெரிவித்தார்.

