யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் பதவிக்காலம் வரும் மார்ச் மாதத்தில் நிறைவடைய உள்ளது. இதனை முன்னிட்டு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கையின் படி, பேரவையின் செயலாளரான பதிவாளர், பொதுவிளம்பரம் மூலம் விண்ணப்பங்களை கோரியுள்ளார்.
விண்ணப்பிக்க விரும்புபவர் இலங்கைப் பிரஜையாகவும், 63 வயதிற்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். நியமனம் பெறுபவர் மூன்று வருடங்களுக்கு, அல்லது அவர் 65 வயதை நிறைவு செய்யும் நாள் வரையிலோ — எது முதலில் வருகிறதோ — அந்த நாள் வரை பதவியில் இருப்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பத்துடன், விண்ணப்பதாரியின் பிறந்த தேதியை உறுதிப்படுத்தும் ஆவணம், முழுமையான சுயதகைமை விபரப் பட்டியல், பல்கலைக்கழக அபிவிருத்திக்கான நோக்கம் மற்றும் நியமனம் கிடைத்தால் அடைய விரும்பும் இலக்குகள் குறித்த சுருக்கமான விளக்கம் ஆகியவை இணைக்கப்பட வேண்டும். முன்னர் துணைவேந்தராக பணியாற்றியவராயின், அவர் செய்த சாதனைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மேலும், விண்ணப்பதாரி அரசுப் பொதுத்துறை, கூட்டுத்தாபனம், நியதிச்சபை அல்லது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தவிர்ந்த பிற உயர்கல்வி நிறுவனம் போன்ற இடங்களில் சேவை புரிபவராயின், இப்பதவிக்கு நியமிக்கப்பட்டால் அந்நிலையிலிருந்து விடுவிக்கப்படுவாரா என்பது தொடர்பாக தொழில் கொள்வோரிடமிருந்து பெறப்படும் கடிதமும் இணைக்கப்பட வேண்டும்.
விண்ணப்பங்கள் ‘பேரவைச் செயலாளர், பதிவாளர் அலுவலகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்’ என்ற முகவரிக்கு அக்டோபர் 15 ஆம் திகதிக்கு முன்னர் அஞ்சல் மூலம் அனுப்பப்படவோ அல்லது நேரடியாகக் கையளிக்கப்படவோ வேண்டும்.
மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை எண் 03ஃ2023 இன் படி, விண்ணப்பங்கள் முடிவடைந்த இரு மாதங்களுக்குள் சிறப்பு பேரவைக் கூட்டம் நடத்தப்படும். அக் கூட்டத்தில் ஒவ்வொரு விண்ணப்பதாரிக்கும் வழங்கப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில், முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களின் பெயர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்.
1978 ஆம் ஆண்டு இல. 16 பல்கலைக்கழகச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி, அடுத்த துணைவேந்தரை ஜனாதிபதியே நியமிப்பார்.
இதையும் படியுங்கள்>லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட SSP சதீஷ் கமகேயின் விளக்கமறியல் நீடிப்பு

