செம்மணி புதைகுழியில் இருந்து எட்டு எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போது அவற்றை சுத்திகரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
புதைக்குழியில் இருந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூட்டுகள் தொடர்பான துல்லியமான தகவல்களை, அகழ்வுப் பணிகள் முடிந்த பின்பே தெரிவிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை (03-09) குறுக்காக காணப்பட்ட இரண்டு எலும்புக்கூட்டுகள் மற்றும் ஒரு எலும்புக்கூட்டின் தோள்பட்டையுடன் இணைந்திருந்த மற்றொன்று முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டன.
மேலும், இன்றைய அகழ்வின்போது சட்டைப் பொத்தான்கள், நாணயம் மற்றும் கைகளில் கட்டும் சிறிய தாயத்து போன்ற சான்றுப் பொருட்களும் மீட்கப்பட்டன.
செம்மணி புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிக்காக நீதிமன்றம் வழங்கிய 45 நாட்களிலிருந்து, நேற்றுடன் (04-09) 43 நாட்கள் நிறைவடைந்துள்ளன.
வரும் சனிக்கிழமையுடன் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் நிறைவுற உள்ளது.
அதேநேரத்தில், புதைகுழியை அண்டிய பகுதிகளில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் ஆய்வுகளின் அடிப்படையில், மேலும் புதைகுழிகள் இருக்கக்கூடும் என வலுவாக நம்பப்படுகிறது.
இதனால், கூடுதலாக எட்டு வார காலத்திற்கு அகழ்வுப் பணிகளைத் தொடர தேவையென நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தேவையான பாதீடுகள் மற்றும் ஏற்பாடுகளைச் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் வரவிருக்கும் மாதங்களில் முன்னெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

