அம்பாறையில் இடம்பெற்ற பெண் படுகொலைச் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரை தேடி அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் யாழ்ப்பாணம் நோக்கி பயணமாகியுள்ளனர்.
பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் வசித்த 38 வயதான, இரு பிள்ளைகளின் தாயான மனோதர்ஷன் விதுஷா கடந்த மே 30ஆம் திகதி கொலை செய்யப்பட்டிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் கடந்த ஜூன் 25ஆம் திகதி, குறித்த குடும்பப் பெண்ணின் வீட்டில் பணிப்பெண்களாக பணியாற்றிய இரட்டையர் சகோதரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பின்னர் கல்முனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
பின்னர், விசாரணையில் முன்னேற்றம் இல்லையென உணர்ந்த படுகொலை செய்யப்பட்ட பெண்மணியின் கணவர், நாட்டின் ஜனாதிபதி, பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு நீதிக்காக கடிதம் எழுதியதோடு, படுகொலையின் பிரதான சூத்திரதாரிகள் என நம்பப்படும் சிலரது பெயர்களையும் சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து, அம்பாறை னு.ஊ.னு.டீ. விசாரணையைத் தீவிரப்படுத்தி, களுவாஞ்சிக்குடி பகுதியில் உள்ள நகைக்கடை உரிமையாளரே இப்பாதகத்தின் பிரதான சூத்திரதாரி என கண்டறிந்தனர். அதேசமயம், அவரது சகோதரரையும் கடையின் நம்பிக்கைக்குரிய பணியாளரையும் செப்டம்பர் 5ஆம் திகதி கைது செய்தனர்.
இக்கைது நடவடிக்கையை அறிந்த பிரதான சந்தேக நபர் தப்பிச் சென்று தனது சொந்த ஊரான யாழ்ப்பாணம் சென்றுள்ளார். அவரை கைது செய்வதற்காக அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் தற்போது யாழ்ப்பாணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, தப்பிச் சென்ற இந்த சந்தேக நபர், படுகொலை செய்யப்பட்ட விதுஷாவின் கணவரின் தங்கையைத் திருமணம் செய்து பெரிய நீலாவணையில் வசித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

