பாராளுமன்ற சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன நேற்று (09) அறிவித்ததாவது, முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை நீக்கும்“Presidents’ Entitlements (Repeal) Bill” அரசியலமைப்பிற்கு முரணானதாக எதுவும் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
எனவே, இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த சட்டமூலத்தின் கீழ், முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் அல்லது முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கும்; வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ வீடு, போக்குவரத்து வசதிகள், பிற சலுகைகள், மாதாந்திர கொடுப்பனவு, செயலாளர் கொடுப்பனவு மற்றும் விதவை மனைவிக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர ஓய்வூதியம் இனி வழங்கப்படாது.
நேற்று பாராளுமன்றத்தில் கூடிய நிர்வாகம், நீதி மற்றும் குடியுரிமைப் பாதுகாப்பு தொடர்பான துறைச் செயற்குழுவும் இந்த சட்டமூலத்தை அங்கீகரித்தது.
டாக்டர் நஜித் இந்திக தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், இந்த சட்டமூலம் நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு, முன்னாள் மற்றும் எதிர்கால ஜனாதிபதிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டிருந்த சலுகைகளை நீக்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், பிற நாடுகளில் முன்னாள் ஜனாதிபதிகள் அல்லது முன்னாள் அரசுத் தலைவர்களுக்கு, பதவியிலிருந்து விலகிய பின்னரும் சில உத்தியோகபூர்வ கடமைகள் அல்லது பொறுப்புகளை நிறைவேற்றுவதால், ஓய்வூதியங்களும் சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன எனவும், ஆனால் இலங்கையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்டமூலத்தால் எந்த உத்தியோகபூர்வ பொறுப்பும் வழங்கப்படாத முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்ட ஓய்வூதியம் மற்றும் பரந்த அளவிலான சலுகைகளை மட்டுப்படுத்துவதாகவும் அதிகாரிகள் விளக்கினர்.
இந்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று காலை 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது

