தியாகிகளை நினைவேந்தும் நிகழ்வுகளை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தும் செயலை கடுமையாக விமர்சித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், தியாக தீபம் திலீபன் அண்ணனின் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்க வந்த அமைச்சர் சந்திரசேகருக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை மறுக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டினார்.
இது தமிழ்க் காங்கிரஸ் முன்னணியின் செயல் எனில், அது அயோக்கியத்தின் உச்சம் என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார்.
இளங்குமரன் மேலும் கூறியதாவது:
‘யாரும் யாரையும் அஞ்சலிக்கலாம்; அதுவே மனித மாண்பு. திலீபன் அண்ணன் போராடிய காலத்தில் அவருக்கு எதிராக நின்ற பலரும் இன்று நினைவேந்தல்களில் பங்கேற்கின்றனர்.
அவர்களை முன்னணியே தேர்தல் அரசியலுக்காக ஏற்றுக்கொள்கிறது. ஆனால், மற்றவர்களை அஞ்சலி செலுத்த விடாமல் தடுக்குவது மிகப் பெரிய முரண்பாடாகும்.
ஒரு மாவீரனின் நினைவேந்தலை வாக்குக் கணக்கிற்காக அரசியலாக்குவது ஒருபோதும் மன்னிக்க முடியாத குற்றம். இது மனித மாண்புகளுக்கு எதிரான காட்டுமிராண்டித்தனமாகவே பார்க்கப்படுகிறது,’ என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

