மருந்துகளின் தரக் கண்காணிப்பு குறித்த விசாரணை திறனை விரிவுபடுத்துவதற்காக, விசேட ஆய்வாளர்களை நியமிக்கவுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அறிவித்துள்ளது.
தரமற்ற மற்றும் பதிவு செய்யப்படாத மருந்துகளை கண்டறிவதில் எங்களுக்கு காணப்படுகிற தடைகளை போக்குவதற்கும் எங்கள் விசாரணைகளை விரிவுபடுத்துவதற்காகவும் ஆய்வாளர்களை நாங்கள் நியமிக்கப் போகிறோம் என்று தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தலைவர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டுக்குள் கொண்டுவரப்படும் மருந்துகளின் தரத்தில் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், பல பதிவு செய்யப்படாத மருந்துகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சம்பவங்கள் உள்ளன.
பதிவு செய்யப்படாத மருந்துகள் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சந்தர்ப்பங்கள் மட்டுமல்லாது காலாவதியான மருந்துகளும் உள்ளன.
அத்துடன் தவறான முத்திரைகளைக் கொண்ட பல மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார்.
இதேவேளை தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தலைமை நிர்வாக அதிகாரி வைத்தியர் சவீன் செமகே கூறுகையில்,
சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக தகுதியற்றதாகக் கருதப்பட்ட முப்பத்தொன்பது மருந்துகள் இருந்தன.
மருந்துகள் முத்திரையிடப்பட்டதில் சிக்கல்கள் உள்ள பல மருந்துகளை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.
அவை இப்போது சந்தையில் இருந்து அகற்றப்பட்டுள்ளன.
அகற்றப்பட்ட 39 மருந்துகளில் பதினாறு மருந்துகள் 2023இல் இறக்குமதி செய்யப்பட்டவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படியுங்கள்>தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்!

