முக்கிய செய்திகள்

சட்டத்தரணி சுமந்திரனை விசாரணைக்குட்படுத்துமாறு சிறிதரன் எம்பி பாராளுமன்றத்தில் முழக்கம்

தமிழரசுக் கட்சியின் உட்கட்சி சண்டை பாராளுமன்றத்தில் நேற்று எதிரொலித்தது

சென்னையில் நடந்த அயலகத் தமிழர் தின நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கலந்துக் கொள்வதை தடுப்பதற்கு பாரிய சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டதன் பின்னணியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளார் என்ற தொனிப்பிட சிறிதரன் நேற்று பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளார்

தமிழ் மக்களுக்கு நீதி வேண்டி போராடுவதற்காக பாராளுமன்றம் அனுப்பபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தனக்கு சுமந்திரனிடமிருந்து நீதி வேண்டி நேற்று பாராளுமன்றத்pல் சபாநாயகரிடம் விநயமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்

கனடா நாட்டில் உள்ள தடை செய்யப்பட்டுள்ள அமைப்புடன் பேசுவதற்காகவே தான் சென்னை சென்றதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளதனை சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சுமந்திரனை விசாரணைக்குட்படுத்துமாறு பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற அமர்வின் போது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து பாராளுமன்றத்தில் சிறிதரன் ஆற்றிய உரையினை உங்களுக்கு தருகின்றோம்

இந்திய தமிழ்நாடு அரசின் ஏற்பாட்டில் கடந்த 11, 12 ஆம் திகதிகளில் சென்னையில் நடைபெற்ற அயலகத் தமிழர் தின நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் பொருட்டு கடந்த 10 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நான் இந்தியாவுக்கு பயணமாகி இருந்தேன்.

அன்றைய தினம் மாலை 6.35 மணிக்கு ஸ்ரீ லங்கன் எயார்லைன் விமான சேவையில் யு.எல் 123 விமானம் புறப்படத் தயாராயிருந்த நிலையில் எனது கடவுச் சீட்டில் குறைபாடு உள்ளதாகவும் பயங்கரவாத குற்றத்தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவினரின் விசாரணைகளுக்கு என்னை உட்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்த விமான நிலைய அதிகாரிகள் எனக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதன்போது என்னுடன் இணைந்து பயணம் செய்வதற்காக விமான நிலையத்துக்கு வருகை தந்திருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக நீண்ட நேர விசாரணைகளின் பின்னர் விமானம் புறப்படத் தயாரான இறுதி நேரத்தில் என்னை இந்திய பயணத்திற்கு அனுமதித்தனர்.

13 ஆம் திகதி நான் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியபோது குறித்த பயணத்தடை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வினவிய போது அவ்வாறான பயணத்தடை எதுவும் விதிக்கப்படவில்லை எனத் தெரிவித்திருந்தனர்.

நீதிமன்றக் கட்டளைகள் எதுவுமின்றி சபாநாயகரின் ஆலோசனை எதுவுமின்றி எனக்கு பயணத்தடை உள்ளதென குடிவரவு,குடியகல்வு அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டமை திட்டமிட்ட வகையிலான சிறப்புரிமை மீறல் என்றே நான் கருதுகின்றேன்.
மக்களினால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினராக எனக்கு இருக்கும் அடிப்படை சிறப்புரிமையை மீறும் வகையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னணி குறித்து இந்த சபையில் நான் கேள்வி எழுப்புகின்றேன்.
அத்தோடு இன்னொரு முக்கிய விடயத்தையும் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

இரு நாட்களுக்கு முன்னர் (19 ஆம் திகதி) யாழ்ப்பாணத்தில் தனியார் ஊடகமொன்றுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் ‘ சிறிதரன் கனடாவிலிருந்து வருகின்ற தடை செய்யப்பட்ட அமைப்போடு பேச முனைந்தாகவும் அதற்காகத்தான் அவர் சென்னை செல்ல இருந்ததாகவும் அந்த காரணத்தின் அடிப்படையில்தான் அவரை தடுக்க விமான நிலையத்தில் முயற்சி செய்திருக்கலாம் ஊகத்தின் அடிப்படையில் சிறீதரனை அவர்கள் மறித்திருக்கலாம். ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை வைத்துதான் நான் இதனைக் கூறுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

எனவே இது தொடர்பில் சுமந்திரனிடம் விசாரித்தால் எந்த எந்த ஊடகங்களில் இந்த செய்தி வந்துள்ளது என்பதனை அறிந்து அந்த ஊடகங்களின் பிரதானிகளை விசாரிப்பதன் மூலம் உண்மையைக் கண்டறிய முடியும். இது எனக்கு எதிராக செய்யப்பட்ட மிகப்பெரும் சதியாகவே நான் கருதுகின்றேன்.

விமான நிலையத்தில் தடுக்கப்பட்டமை தொடர்பில் சிறீதரன் தனக்கு தெரிவிக்கவில்லை என்றும் சுமந்திரன் அதில் கூறியுள்ளார்.

நான் அவரை சென்னையில் சந்தித்தபோது சுமந்திரனும் இது தொடர்பில் என்னிடம் எதுவும் கேட்கவும் இல்லை.

இதனை விட வடக்கு மாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு உறுப்பினராக இருந்த அய்யூப் அஸ்மின் என்னை விமான நிலையத்தில் தடுத்த அன்றையய தினமான 10 ஆம் திகதி தன்னுடைய முக நூலில் ”கடந்த நாட்களில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் விமான நிலையத்தில் எவ்வித இடையூறுகளும் எவராலும் ஏற்படுத்தப்படவில்லை.

அவ்வாறு பரப்பப்படுகின்ற செய்திகளில் உண்மைகள் எதுவும் இல்லை விமான நிலைய உயரதிகாரி” என்ற செய்தியை வெளியிட்டுள்ளார்.

நான் இந்தியாவிலுள்ள பிரபல அரசியல் தலைவர் செந்தமிழன் சீமானுடன் இருக்கும் படத்தையும் தன்னுடைய முகநூலில் பதிவேற்றி எனக்கு எதிராக இந்த செய்தியை வெளியிட்டுள்ளார்.

அஸ்மினும் சுமந்திரனும் நெருங்கிய நண்பர்கள் .சுமந்திரன் சொன்ன செய்திக்கும் அஸ்மினின் பதிவுக்கும் . ஏதோ ஒரு தொடர்பு இருப்பதுபோல் எனக்குத் தெரிகின்றது.
என்னை அந்த நிகழ்வுக்கு போக விடாது தடுப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆகவே இதற்குப் பின்னால் சதி உள்ளது.

எனவே இவ்விடயத்தில் மிகக்கூடிய கவனம் எடுத்து விசாரிக்கப்பட வேண்டும்.
இதேவேளை என்னுடைய பிரத்தியேக பாதுகாப்பு அதிகாரி ஜி.ஜி.பி. ரத்ன குமார .இவர் என்னுடன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மெய்ப்பாதுகாவலாராக இருந்தார்.

திடீரென சென்ற வாரம் அவர் மாற்றப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக நான் கடந்த 8 ஆம் திகதி பொலிஸ்மா அதிபரிடம் நேரடியாக கடிதம் வழங்கியிருந்தேன்.

அதன் பிரதியை சபா பீடத்திற்கு சமர்ப்பிக்கின்றேன்.

இதுவரை அந்த அதிகாரியை மீண்டும் எனக்கு நியமிக்கவில்லை.

அஸ்மினின் முக நூல் பதிவையும் நான் சபாபீடத்தில் சமர்ப்பிக்கின்றேன்.

சுமந்திரன் வழங்கிய பேட்டியை கொண்ட பென் டிரைவையும் சபா பீடத்தில் சமர்ப்பிக்கின்றேன்.

இது என் மீது புனையப்பட்டுள்ள மிகப்பெரிய மோசடி
நான் எந்தவொரு காலத்திலும் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள கனடாவிலுள்ள அமைப்புடன் பேசுவதற்கு தயாராகவில்லை. அப்படி யாரும் என்னைக் கேட்டதுமில்லை.

அவ்வாறான முயற்சி எதுவும் மேற்கொள்ளப்படவும் இல்லை. அரசின் பேச்சாளர் போல் அல்லது புலனாய்வுத்துறையின் பேச்சாளர் போல் ஊகத்தின் அடிப்படையில் ஊடகங்களில் வந்தது என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளது மிகப் பாரதூரமானது.

எனக்கு நீதி வேண்டும். சர்வதேச பாராளுமன்றத்திடமும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் சர்வதேச மன்னிப்புச்சபையிடமும் இக்கோரிக்கையை முன்வைக்கின்றேன்.

பாராளுமன்றத்திடமிருந்து எனக்கு நீதி கிடைக்கும் என நம்புகின்றேன்.
எனவே நீதியான நேர்மையான விசாரணைக்கு எனது விடயத்தை உட்படுத்த வேண்டும் .எனக்கு இதற்கான வழியை சொல்ல வேண்டும் என பாராளுமன்றத்தில் சிறிதரன் முழங்கியுள்ளார்

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும்  HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த
உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அரசாங்கம் நாட்டை ‘சுத்தம்’ செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல