2016ஆம் ஆண்டு 17ஆம் இலக்க மாகாணசபை சட்டத்தில் புதிய கலப்பு முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்ற அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
அதனை நடைமுறைப்படுத்துவதற்காக எல்லை நிர்ணயம் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், எனினும் அது பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய தற்போதைய சூழ்நிலையில், முந்தைய முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை மீண்டும் நடத்துவதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பழைய முறையின்படி, மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாயின் 1988 மாகாணசபை தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கமையவே நடத்த வேண்டும்.
அதன்படி, இந்த விவகாரம் தொடர்பான ஒரு குறிப்பாணை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் மாகாணசபைத் தேர்தலை ஆகஸ்ட் மாதத்தில் நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.