அமெரிக்க நாட்டின் குடியுரிமை பெறாதவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை ரத்து செய்யும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக கடந்த திங்கள்கிழமை பதவியேற்ற டிரம்ப் பிறப்புரிமை அடிப்படையிலான அமெரிக்க குடியுரிமை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார்
இந்த உத்தரவு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19 ம் திகதி முதல் அமலுக்கு வரும் என்பதால் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டை சேர்ந்தவர்கள் அறுவை சிகிச்சை வழியாக குழந்தை பெற்றுக்கொண்டு அமெரிக்க குடியுரிமை பெறுவதற்காக முயற்சி செய்கிறார்கள்.
7 மாத கர்ப்பிணிகள் கூட அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையை நாடியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜனாதிபதி டிரம்ப்பின் இந்த உத்தரவை எதிர்த்து அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் சியாட்டல் மாகாண நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்ககொள்ளப்பட்ட போது நீதிபதி ஜான் கோக்னார்,’டிரம்ப்பின் உத்தரவு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது’ எனக் கூறி அந்த உத்தரவுக்கு தற்காலிக தடை விதித்தார்.
இதன் மூலம் டிரம்ப் உத்தரவு அமலாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.