முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம் பகுதியில் நாய் ஒன்று தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவரும் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒட்டுசுட்டான் பகுதியில் கடந்த சனிக்கிழமை (25-01-2025) நாயொன்று மரத்தில் தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது.
நாய் கொலை செய்யப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்ததுடன் அதற்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்துள்ளன
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இன்று (27) ஒட்டுசுட்டான் பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் 48 வயதுடைய ஒட்டுசுட்டான் பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்த நாய், ஒட்டுசுட்டான் மத்தியஸ்த சபை வழங்கிய தீர்ப்புக்கமையவே கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஒட்டுசுட்டான் பகுதியை சேர்ந்த பெண் தனது ஆடு ஒன்றை நாய் கடித்துவிட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளார்
அதனைத் தொடர்ந்து, அச்சம்பவம் இணக்க சபைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் வழக்கு விசாரணைக்காக கூடிய இணக்க சபையின் மூன்று நீதவான்கள் அடங்கிய குழாத்தினரே நாயை தூக்கிலிடுமாறு தீர்ப்பளித்துள்ளனர்.
ஆதன் அடிப்படையில் சந்தேக நபரான பெண் தான் வளர்த்த நாயை தூக்கிலிட்டுள்ளார்
இணக்கசபையில் இருந்த மூன்று நீதவான்களான
ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய ஓய்வு நிலை அதிபர் யோகேஸ்வரன்
சின்னத்தம்பி பாடசாலை ஓய்வு நிலை அதிபர் நித்தியகலா
கிராம அலுவலரின் தாயான மேகலா ஆகிய மூவருமே இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது
.