முக்கிய செய்திகள்

நுகர்வோரையும் பாதுகாக்கவே அரசாங்கம் நெல்லுக்கு உத்தரவாத விலையை நிர்ணயித்ததாக பிரதமர் தெரிவித்துள்ளார்

அரசாங்கம் உத்தரவாத விலையில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வதாகவும், விவசாயிகளைப் போன்று நுகர்வோரையும் பாதுகாக்கும் வகையிலேயே அரசாங்கம் நெல்லுக்கு உத்தரவாத விலையை வழங்கியுள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் சுன்னாகம் ஏழாலை பிரதேசத்தில் நேற்று (15-02-2025) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

‘வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலின் பின்னர் நான் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும். 2025ஆம் ஆண்டு இலங்கைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆண்டு.

கடந்த சில வருடங்களில் இலங்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பாரியதொரு பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்க வேண்டியிருந்தது.

நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது. முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தோம்.

கடந்த சில ஆண்டுகளில், இந்த முறைமையை மாற்ற மக்கள் தீவிரமாக பங்களித்ததைக் நாம் கண்டோம். நாட்டு மக்கள் வேறு நாடு, வேறு அரசியல் கலாசாரம், வேறு தலைமை வேண்டும் என்று ஏற்கனவேயிருந்த முறைமையை மாற்ற முடிவு செய்தனர்.

2024 தேர்தலுடன், கடந்த சில வருடங்களாக மக்கள் இந்த நாட்டில் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

இத்தகையதொரு பாராளுமன்றத்தை இத்தகையதொரு தலைமையை மக்கள் ஏன் தெரிவு செய்தார்கள் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம்.

மக்கள் முதலில் ஜனாதிபதியை தேர்ந்தெடுத்தனர். அவர் இங்குள்ள எங்களைப் போன்ற எளிய குடும்பத்தில், விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவர். அதுதான் முதல் மாற்றம்.

அதேபோன்று பொதுத் தேர்தலிலும் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தனர். பாராளுமன்றத்திற்கு உங்களை உண்மையாக பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய ஒரு குழுவை நீங்கள் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்.

எனவே பாராளுமன்றத்தில் இருப்பவர்கள் அரசியல் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது உங்களுக்குத் தெரியும்.

அவர்களில் பெரும்பாலானோர் வைத்தியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அதேபோன்று விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.

அத்துடன் வரலாற்றில் முதன்முறையாக அதிகளவான பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த பாராளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளனர்.

நாம் ஒரு வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளோம், இந்த நாட்டை எம்மால் மாற்ற முடியும்.

நாட்டின் பிரஜை என்ற வகையில், ஒவ்வொரு பிரஜைக்கும் ஒரே சட்டம் சம உரிமைகள் இருக்க வேண்டும். நாம் அனைவரும் சமமானவர்கள். ஒரு நாடாக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.

சமத்துவம் என்றால் நீங்கள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள் என்று அர்த்தமல்ல. ஒரு பிரஜையாக உங்களுக்கு சம உரிமை இருக்க வேண்டும்.

எமது நாட்டில் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் இனங்கள் இருப்பது எமக்கு பெரும் பலமாக இருப்பதுடன் அது எமது நாட்டிற்கு ஒரு தனித்துவத்தையும் பெற்றுத் தருகின்றது. இது மிகவும் பெறுமதியான ஒரு அம்சம்.

நாட்டின் பிரஜை என்ற வகையில் ஒவ்வொருவருக்குமான கௌரவம் இருக்க வேண்டும். எமது குரல்களுக்கு செவிசாய்க்கின்ற ஒருவர் வேண்டும்.

நாட்டின் முடிவெடுப்பதில் எங்களின் செயற்திறமான பங்களிப்பு அவசியம். அதனால்தான் மக்கள் இந்த அரசை தேர்ந்தெடுத்தனர்.

அதனால்தான் 2024 தேர்தல் இலங்கைக்கு ஒரு வரலாற்று வெற்றியாக பார்க்கப்படுகிறது.

முன்னைய அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள் பல இடங்களில் இருந்தன.

எந்த விஞ்ஞானபூர்வமான அடிப்படையும் இல்லாமல் அமைச்சுக்கள் பிரிக்கப்பட்டன, கல்வி மற்றும் நெடுஞ்சாலை அபிவிருத்தி ஆகியவை ஒன்றாக இருந்தன.

எனவே இதுபோன்ற முடிவுகளை எடுக்காமல், விஞ்ஞானபூர்வமாககவும், தர்க்க ரீதியாகவும் சரியான முடிவுகளை எடுக்க நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

நாம் விவசாயிகளுக்கு நெல்லுக்கு உத்தரவாத விலையை வழங்கியுள்ளோம். விவசாயிகளைப் போலவே நுகர்வோரையும் பாதுகாக்க வேண்டும். அதனால் தான் உத்தரவாத விலையை வழங்க வேண்டியுள்ளது.

அதேபோன்று எனது விடயத் துறை பற்றியும் நான் இங்கு குறிப்பிட வேண்டும். இந்நாட்டு கல்வி முறையினால் பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த முறையை மாற்றி அவர்களுக்கு நல்ல கல்வியை வழங்க நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். அதற்குத் தேவையான முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

இந்நிகழ்வில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரம், பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும்  HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த
உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அரசாங்கம் நாட்டை ‘சுத்தம்’ செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல