இலங்கையின் கையிருப்புக்கள் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டத்தின் ஊடாக அடைவதற்கு எதிர்பார்க்கப்பட்ட இலக்கில் அரைவாசியை அடைந்திருப்பதாகவும், இது பெரிதும் வரவேற்கத்தக்க விடயம் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டத்தலைவர் பீற்றர் ப்ரூயர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் குறித்த மூன்றாம் கட்ட மீளாய்வு தொடர்பில் எட்டப்பட்ட உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாட்டுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை ஒப்புதல் அளித்தது.
அதனையடுத்து வொஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத் தலைமையகத்தில் இலங்கை நேரப்படி நேற்று (03-03-2025) மு.ப 8.30 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டத்தலைவர் பீற்றர் ப்ரூயர், பிரதித்தலைவர் கற்ஸியரினா ஸ்விரிட்ஸென்கா மற்றும் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்த்தா டெஸ்ஃபாயே வோல்ட்மைக்கல் ஆகியோர் கலந்துகொண்டு, இலங்கையின் சமகால பொருளாதார நிலைவரம் தொடர்பில் தெளிவுபடுத்தினர்.
அதன்படி இலங்கையின் தற்போதைய பொருளாதார முன்னேற்றம் குறித்துக் கருத்துரைத்த பீற்றர் ப்ரூயர், ‘நான் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதற்தடவையாக இலங்கைக்கு வருகைதந்தபோது, நாடு பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்தது. பொதுமக்கள் எரிபொருள், எரிவாயு, உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக நீண்ட வரிசைகளில் காத்திருந்ததுடன் பொருளாதார நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன. அக்காலப்பகுதியில் தீவிர நெருக்கடியின் விளைவாக இலங்கை அதன் பொருளாதாரத் தொழிற்பாடுகள் மூலமான வருமானத்தில் 10 சதவீதத்தை இழந்திருந்தது’ எனச் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும் கடந்த 2023 ஆம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து தற்போதுவரை இலங்கை கடந்த 5 வருடகாலத்தில் இழந்த வருமானத்தில் 40 சதவீதத்தை மீளப்பெற்றிருப்பதாகவும், இலங்கையின் அண்மைய பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதமாக அமைந்திருப்பதே இம்மீட்சிக்கு சான்று எனவும் அவர் தெரிவித்தார்.
அத்தோடு எதிர்வருங்காலத்தில் இலங்கையில் பொருளாதார வாய்ப்புக்கள் அதிகரிக்கும், வருமானம் உயர்வடையும், வறுமை மட்டம் வீழ்ச்சியடையும், புதிய வாய்ப்புக்களைத்தேடி மக்கள் புலம்பெயரும் எண்ணிக்கை குறைவடையும் என்றும் பீற்றர் ப்ரூயர் நம்பிக்கை வெளியிட்டார்.

