ஜனநாயக தமிழரசுக் கட்சி உள்ளிட்ட மேலும் சில கட்சி மற்றும் அமைப்புகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்துள்ளதாக ஜனநாயகத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் கருணாகரன் நாவலன் தெரிவித்துள்ளார்
சைக்கிள் சின்னத்தில் எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளதா அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று (15-03-2025) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்துக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
‘தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையில் இன்று பல கட்சிகள் இணைந்துள்ளன.
அதன் ஒரு அங்கமாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசாவின் வழிநடத்தலில் ஜனநாயக தமிழரசுக் கட்சி இக்கூட்டணியில் இணைந்து தமிழ் மக்களின் தீர்வுக்காகவும், மக்களின் அடிப்படைத் தேவை மற்றும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் செயற்படவுள்ளதாக அவர் தெரிவத்தார்
அத்துடன் சிங்களப் பேரினவாதத்தின் ஒற்றர்களால் தமிழினத்தின் அரசியல் கேள்விக்குறியாக உள்ளது எனக் கூறிய அவர், இவ்விடயத்தை மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டிய காலத்தின் கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
குறித்த கூட்டணியில் ஜனநாயகத் தமிழரசுக் கட்சியுடன், தமிழ்த் தேசிய பசுமை இயக்கம், தமிழ்த் தேசியக் கட்சி மற்றும் தென்மராட்சியின் அருந்தவபாலன் தரப்பும் இக்கூட்டணியில் இணைந்துள்ள அதேவேளை மேலும் சில தமிழ்த் தேசிய அமைப்புக்கள் இக்கூட்டணியில் இணையும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் மக்களுக்கு பழக்கப்பட்ட சின்னம் என்பதன் அடிப்படையிலும் மக்களுக்கு குழப்பங்களை ஏற்படுத்தக்கூடாது என்ற காரணத்தின் அடிப்படையிலும் தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் பெயர் மற்றும் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

